Published : 25 Sep 2017 03:13 PM
Last Updated : 25 Sep 2017 03:13 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரை வென்றதோடு, தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் இந்திய அணிக்குள் எந்த வீரர் வந்தாலும் களத்தில் கருணைகாட்டாமல் ஆட வேண்டும் என்று விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அணி அனைத்து வடிவங்களிலும் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்து கேப்டன் மோர்கனும், எதிரணியினருக்குக் கருணை காட்டகூடாது, சமரசமின்றி வெற்றியைக் குறிக்கோளாகக் கொள்வோம் என்று கூறினார், விராட் கோலியும் எதிரணிக்கு கருணை காட்டக்கூடாது என்று கூறியுள்ளார்.
விராட் கோலி ஒரு கேப்டனாக தனது ஆட்டத்தின் மூலம் ஒரு உதாரணமாகத் திகழ்ந்து வருகிறார், அவர் 1,137 ரன்களை 21 போட்டிகளில் இந்த ஆண்டில் எடுத்துள்ளார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபா டுபிளெசிஸைக் கடந்தார் விராட் கோலி.
இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்ததையடுத்து விராட் கோலி “ஒட்டுமொத்த அணிக்கும் பாராட்டு உரித்தாகுகிறது. ஆனால் இந்தப் பயணம் இறுதிப் போட்டி முடிந்த பிறகுதான் முடியும். இப்போது வேறு சில வீரர்களுக்கு வாய்ப்பளிப்போம். ஆனால் அணியில் உள்ள 15 வீரர்களும், யாராக இருந்தாலும் களத்தில் இறங்கி விட்டால் கருணை காட்டாமல் ஆட வேண்டும்” என்றார்.
முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் பேடி கூறும்போது, “உள்ளபடியே கூற வேண்டுமென்றால் இந்தியா சிறந்த 11 வீரர்களை களமிறக்கவில்லை. ஆனால் இலங்கையாகட்டும் ஆஸ்திரேலியாவாகட்டும் இந்தியா வெற்றி பெற்று வருகிறது.
நமக்கு தரவரிசை மீது நேசம் உள்ளது, ஆனால் கொஞ்சம் எதார்த்தமாக யோசித்தால் கடந்த ஓராண்டாகவே இந்திய அணிக்கு எதிரணியினரால் பெரிய சவால் இல்லை. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் தோற்ற பிறகே இந்திய அணி சவால்களை எதிர்கொள்ளவேயில்லை.
நெருக்கடி நிலை ஏற்பட்டு அதிலிருந்து அணி எப்படி மீள்கிறது என்று பார்த்தால்தான் இந்த அணியைப் பற்றி நாம் ஏதாவது மதிப்பிட முடியும்.” என்றார்.
இந்திய அணியில் கடைசி 2 போட்டிகளுக்கு ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அக்சர் படேல் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT