Published : 28 Feb 2023 05:29 AM
Last Updated : 28 Feb 2023 05:29 AM

வெலிங்டன் டெஸ்ட் போட்டி | இங்கிலாந்து அணிக்கு 258 ரன்கள் இலக்கு - கடைசி நாளில் வெற்றிக்கு 210 ரன்கள் தேவை

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய நியூஸிலாந்து பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன். படம்: ஏஎப்பி

வெலிங்டன்: 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 258 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து அணி. இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி நாளில் 210 ரன்கள் தேவையாக உள்ளது.

வெலிங்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 435 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ- ஆன் ஆனது. 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து 3-வது நாள் ஆட்டத்தில் 83 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. டாம் லேதம் 83, டேவன் கான்வே 61, வில் யங் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கேன் வில்லியம்சன் 25, ஹென்றி நிக்கோல்ஸ் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணியானது 162.3 ஓவர்களில் 483 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

தனது 26-வது சதத்தை விளாசிய கேன் வில்லியம்சன் 282 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் சேர்த்து ஹாரி புரூக் பந்தில் ஆட்டமிழந்தார். ஹென்றி நிக்கோல்ஸ் 28, டேரில் மிட்செல் 54, டாம் பிளண்டல் 90, மைக்கேல் பிரேஸ்வெல் 8, டிம் சவுதி 2, மேட் ஹென்றி 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 4 விக்கெட்களை அந்த அணி 5 ரன்களுக்கு தாரை வார்த்தது.

இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் லீச் 5 விக்கெட்களை வீழ்த்தினார். 258 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 24 ரன்களில் டிம் சவுதி பந்தில் போல்டானார். பென் டக்கெட் 23, ஆலி ராபின்சன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 210 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி.

கேன் வில்லியம்சன் சாதனை..

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த நியூஸிலாந்து வீரர் என்ற சாதனை ராஸ் டெய்லர் வசம் இருந்தது. அவர், 112 போட்டிகளில் 7,683 ரன்கள் குவித்திருந்தார். இந்த சாதனையை தற்போது கேன் வில்லியம்சன் முறியடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் வில்லியம்சன் 29 ரன்களை கடந்த போது இந்த மைல் கல் சாதனையை எட்டினார். 92-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் 32 வயதான வில்லியம்சன் 53.33 சராசரியுடன் 7,787 ரன்கள் குவித்துள்ளார். இதில் 26 சதங்கள், 33 அரை சதங்கள் அடங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x