Published : 27 Feb 2023 05:26 PM
Last Updated : 27 Feb 2023 05:26 PM

அப்போது தோனி ‘வெறி’ உச்சத்தில் இருந்த காலம்: தன் வாய்ப்புகள் குறித்து மனம் திறந்த தினேஷ் கார்த்திக்

தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் | கோப்புப்படம்

ஐபிஎல் அணியான ஆர்சிபி போட்காஸ்ட் நிகழ்ச்சியில் தோனி இருந்தபோது, அணியில் விக்கெட் கீப்பர்களுக்கான போட்டி பற்றி தினேஷ் கார்த்திக் சுவாரஸ்யமான விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தனக்கும் தோனிக்கும் இடையே இருந்த போட்டி குறித்தும் தினேஷ் கார்த்திக் பகிர்ந்து கொண்டார்.

இப்போது இந்திய அணியில் ஏகப்பட்ட விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். இஷான் கிஷன், ரிஷப் பந்த், ராகுல், சஞ்சு சாம்சன், கே.எஸ்.பரத் உள்ளிட்டவர்கள் உள்ளனர். ஆனால், 2000-ம் ஆண்டிலிருந்தே இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் போன்ற ஒரு விக்கெட் கீப்பரைத் தேடிக்கொண்டிருந்தது. இதற்காக பலரையும் இந்திய அணித் தேர்வுக்குழு பரிசீலனை செய்ததில் கடைசியில் எம்.எஸ்.தோனி வாய்ப்பு பெற்றார். தோனி தன் கிரிக்கெட் கரியரில் டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளில் அவரது கேப்டன்சியில் உதை மேல் உதை வாங்கியதைத் தவிர வீரராகவோ, விக்கெட் கீப்பராகவோ அவரிடம் குறை காண இடமில்லை என்றே அவரது ஆட்டம் இருந்தது.

ஆனால், தோனி காலக்கட்டத்தில் அவருடைய ஆதிக்கத்தினால் பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட விக்கெட் கீப்பர்களுக்கு வேலை இல்லாமல் போயிற்று. தோனிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு அறிமுகப் போட்டியில் ஆடியவர். தோனி 2004-ல் செப்டம்பரில் ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானார், பிறகு அதே ஆண்டின் இறுதியில் டெஸ்ட்டில் அறிமுகமானார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்களை விளாசித் தள்ளிய நீள் முடி வைத்திருந்த தோனி மெகா ஹிட் ஆகி விட்டார். ஒரே நாளில் சூப்பர் ஸ்டாராகவும் மாறிவிட்டார். அதாவது தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு வரும் நேரத்தில் தோனி மெகா ஹிட் ஆகிவிட்டார். ரசிகர்களிடத்தில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்று கூறுகிறார் தினேஷ் கார்த்திக்.

“நான் தோனிக்கு முன்பே அறிமுகமாகி விட்டேன். இந்தியா ஏ தொடரில் நாங்கள் இருவருமே ஆடினோம். அங்கிருந்துதான் நான் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டேன். அப்போதுதான் அவருடன் முதல் முறையாக இணைந்து ஆடினேன். நான் நன்றாக ஆடியதால் இந்திய அணியில் என்னைத் தேர்வு செய்தார்கள். அதன் பிறகு ஒருநாள் தொடர் ஒன்றில் தோனி சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்க விட்டார்.

உலகம் அதுவரை இப்படிப்பட்ட ஓர் ஆட்டத்திற்கு பழக்கப்படவில்லை. அப்போது அதுபோன்ற ஒன்றை ரசிகர்கள் பார்த்ததில்லை. அங்கிருந்து ‘தோனி.. தோனி’ என்ற தோனி வெறி பரவியது. அவர் ஒரு ஸ்பெஷல் பிளேயர் என்று மக்கள் கருதினர்.

நான் இந்திய அணிக்கு வரும்போது தோனி வெறி பெரிய அளவில் இருந்ததால் அவரை அணிக்குள் நிச்சயம் எடுத்தாக வேண்டும் என்ற நிலை இருந்தது. அதன் பிறகு அனைத்து வடிவங்களிலும் எனக்கு மாற்றான வீரர் ஆனார் தோனி. அங்கிருந்து அவர் திரும்பிப் பார்க்கவில்லை. சிறப்பாக ஆடினார். கடைசியில் போட்டி என்பது என்ன வாய்ப்புகள் வரும்போது இறுகப் பற்றிக் கொள்வதில்தானே இருக்கின்றது.

எனவே, நான் திறமையை வளர்த்துக் கொள்வதில் நாட்டம் செலுத்தினேன். உலகின் தலைசிறந்த பேட்டராக வேண்டும் என்ற வெறி என்னிடமும் இருந்தது. தோனி நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். அனைத்து வடிவங்களிலும் அவர் செட்டில் ஆன ஒரு வீரர் ஆனார். அவர் தவறு செய்யவில்லை, அவரை பேட்டிங் ஆர்டரில் முன்னாலேயே இறக்கினார்கள். இலங்கைக்கு எதிராக அதிரடி சதம் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 85 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பிங்கிலும் தோனி பிரில்லியன்ட்.

ஒரே நாளில் பிராண்ட் ஆகிவிட்டார் தோனி. மக்கள் அவரை பின் தொடர்ந்து சென்றனர். நான் எப்போதுமே வாய்ப்புகளைத் தேடிக்கொண்டுதான் இருந்தேன்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x