Published : 25 Feb 2023 06:25 AM
Last Updated : 25 Feb 2023 06:25 AM

நியூஸி.க்கு எதிரான டெஸ்டில் அதிரடி ஆட்டம் - 9 இன்னிங்ஸில் 800 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார் ஹாரி புரூக்

ஹாரி புரூக்

வெலிங்டன்

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக், ஜோ ரூட் சதம் விளாசினர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மவுண்ட் மவுங்கனுயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது.

பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. ஸாக் கிராவ்லி 2, ஆலி போப் 10 ரன்களில் மேட் ஹென்றி பந்தில் ஆட்டமிழந்தனர். பென் டக்கெட் 9 ரன்னில் டிம் சவுதி பந்தில் நடையை கட்டினார். 6.4 ஓவர்களில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய ஹாரி புரூக், ஜோ ரூட்டுடன் இணைந்து எந்வித நெருக்கடியையும் உணராமல் அதிரடியாக விளையாடினார்.

107 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார் ஹாரி புரூக். 6-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஹாரி புரூக்கிற்கு இது 4-வது சதமாக அமைந்தது. மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 182 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் தனது 29-வது சதத்தை அடித்தார். இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. ஹாரி புரூக் 169 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகளுடன் 184 ரன்களும், ஜோ ரூட் 101 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தஜோடி 4-வது விக்கெட்டுக்கு இதுவரை 294 ரன்கள் குவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹாரி புரூக் 153 ரன்கள் விளாசியிருந்தார். இதுவே டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ரன்களாக இருந்தது. இதை தற்போது வெலிங்டன் டெஸ்டில் கடந்துள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டியில் 9 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள ஹாரி புரூக் 5 சதங்கள், 3 அரை சதங்களுடன் 807 ரன்களை வேட்டையாடி உள்ளார். இதன் மூலம் 9 இன்னிங்ஸ்களில் 800 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார் ஹாரி புரூக்.

இந்த வகையில் இதற்கு முன்னர் 9 இன்னிங்ஸ்களில் இந்தியாவின் வினோத் காம்ப்ளி 798 ரன்கள் சேர்த்திருந்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது ஹாரி புரூக் முறியடித்துபுதிய சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்தின் ஹெர்பர்ட் சட்க்ளிஃப் (780 ரன்கள்), இந்தியாவின் சுனில் கவாஸ்கர் (778), மேற்கிந்தியத் தீவுகளின் எவர் டன் வீக்ஸ் (777) ஆகியோரது சாதனைகளையும் அசாத்தியமாக தகர்த்தெறிந்துள்ளார்24 வயதான ஹாரி புரூக்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x