Published : 24 Feb 2023 05:28 PM
Last Updated : 24 Feb 2023 05:28 PM

மீண்டும் கேப்டன் ஆகிறார் ஸ்டீவ் ஸ்மித்: 3-வது டெஸ்ட்டில் இருந்து கம்மின்ஸ் விலகல்

ஸ்மித் மற்றும் கம்மின்ஸ் | கோப்புப்படம்

மார்ச் 1-ம் தேதி இந்தூரில் துவங்க உள்ள 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார். இது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. ஆனால், ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டன் பொறுப்பு வகிப்பது அணிக்கு புத்துணர்ச்சியை அளிக்குமா என்பதை கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கம்மின்ஸின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார். மிட்செல் ஸ்டார்க், ஆடும் லெவனில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கன்கஷன் காரணமாக டேவிட் வார்னர், காயம் காரணமாக ஹேசில்வுட் ஆகியோர் தொடரிலிருந்து விலகியதும் ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவுதான். இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் ஆகர் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்று விட்டார்.

லெக் ஸ்பின்னர் ஸ்வெப்சன் இந்த முறை இந்தூர் டெஸ்ட்டில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் உடல் ரீதியாகத் தயார் என்று தெரிவித்துள்ளார். ஆனால், அணியின் சேர்க்கை எப்படி இருக்கும், ஸ்மித்தின் கண்ணோட்டம், தலைமை உத்தி எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்தே கிரீனுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துள்ளது. நாக்பூர், டெல்லி இரண்டிலுமே குழிப்பிட்சைப் போட்டு இந்தியா அவர்களை வெற்றி கொண்டாலும் ஆஸ்திரேலியாவுக்கு வில்லனே அதன் ஸ்வீப் ஷாட்கள்தான் என்பதை குறிப்பிட்டிருந்தோம். நிபுணர்களும் இதைக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தூர் பிட்சும் அதே போல்தான் இருக்கும். ஆஸ்திரேலியர்களுக்கு இத்தகைய பிட்ச்களில் ஆடிப் பழக்கமில்லை. என்னென்னவோ பயிற்சி செய்து பார்த்துள்ளனர். அஸ்வின் போலவே உள்ள இன்னொரு பவுலரை வைத்து முயற்சி செய்து பார்த்தனர். ஆனால், எதுவும் கைகொடுக்கவில்லை. அவர்கள் இன்னும் முயற்சி செய்யாதது, ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியும் முயற்சி செய்யாத ஒன்று உண்டு. அது தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்து ஆடுவது, அப்படி ஆடினால்தான் தாழ்வான பவுன்ஸ் கொண்டு கணுக்காலுக்குக் கீழ் செல்லும் பந்துகளில் அவுட் ஆகாமல் இருக்க முடியும் போல் தோன்றுகிறது. ஆனால், அப்படி ஆடினால் தலையில் பட்டால் எல்.பி என்று ஆகிவிடும். ஆகவே இதுவும் கஷ்டம்தான்.

ஆகவே, அனைத்து உத்திகளும் தோல்வியடைந்த நிலையில் ஆஸ்திரேலியா என்ன மாதிரியான உத்திகளைக் கடைப்பிடிக்கப் போகின்றது. அதுவும் வார்னர், கம்மின்ஸ் இல்லாத நிலையில் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கே.எல்.ராகுல்? - இந்திய அணியின் ஒரே தலைவலி கே.எல்.ராகுல்தான். ஆனால், அவரும் கூட இத்தனை வாய்ப்புகள் அளிக்கப்பட்டப் பிறகு ஒரு அரைசதம் எடுத்தாவது முட்டுக் கொடுக்கும் அணி நிர்வாகத்தையும், ராகுல் திராவிட்டையும் ரோகித் சர்மாவையும் காப்பாற்றுவாரா என்பதை பார்க்க ஆவலாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x