Published : 24 Feb 2023 04:57 PM
Last Updated : 24 Feb 2023 04:57 PM

பிராட்மேன் வரிசையில் இணைந்த ஹாரி ப்ரூக்: இங்கிலாந்தை எழுச்சி பெற செய்த ரூட் - ப்ரூக் இணையர்!

ரூட் மற்றும் ப்ரூக்

வெலிங்டனில் இன்று தொடங்கிய இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது நியூஸிலாந்து அணி. தொடக்கத்திலேயே இங்கிலாந்தின் 3 விக்கெட்டுகளை சாய்த்து அச்சுறுத்தினர் நியூஸிலாந்து வீரர்கள். ஆனால், அதன் பிறகு கிரிக்கெட் உலகின் நவீன டெஸ்ட் அதிரடி மன்னன் ஹாரி ப்ரூக், 169 பந்துகளில் 184 ரன்களையும், ஜோ ரூட் 101 ரன்களையும் விளாசி முதல் நாள் ஆட்ட முடிவில் அதே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இங்கிலாந்தை 315 ரன்கள் எடுக்க செய்தனர்.

இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 294 ரன்களை 61 ஓவர்களில் அதிரடியாக விளையாடி சேர்த்தனர். ‘விக்கெட் விழுந்தால் என்ன? என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என ஹாரி ப்ரூக் இறங்கி வந்து ஆடி 10 பவுண்டரிகளுடன் 51 பந்துகளில் அரைசதம் கண்டார். உணவு நேர இடைவேளையின் போது இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.

அதற்கடுத்த ஒரு மணி நேரத்தில் ஹாரி ப்ரூக், தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 95 ரன்களை அதிவிரைவாக எட்டி இருந்தார். ஜோ ரூட் உறுதுணையாக நின்று, 42 ரன்கள் எடுத்தார். இருவரும் 214 பந்துகளில் 150 ரன்கள் சேர்த்தனர்.

ஜோ ரூட், 122 பந்துகளில் இரண்டே பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். ஹாரி ப்ரூக், 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 107 பந்துகளில் சதம் கண்டார். இது அவரது 4-வது சதமாகும்.

145 பந்துகளில் 150 ரன்களை அவர் எட்டினார். அடுத்த 24 பந்துகளில் மேலும் 34 ரன்களைச் சாத்தி எடுத்து 169 பந்துகளில் 24 பவுண்டரி 5 சிக்சர்கள் உடன் 184 ரன்கள் எடுத்த நிலையில் பேட் செய்து வருகிறார். ஜோ ரூட் தனது 29-வது டெஸ்ட் சதத்தை எடுத்து டான் பிராட்மேனின் 29 டெஸ்ட் சத மைல்கல்லை சமன் செய்துள்ளார்.

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சை சாத்தி வருகின்றனர் ப்ரூக், ரூட் இணையர். நாளை தின் ஆட்டத்தில் அநேகமாக ப்ரூக்கையும், ரூட்டையும் வீழ்த்தவில்லை எனில் நியூஸி.க்கு சங்கடம் தான். ப்ரூக்கை களத்தில் கட்டுப்படுத்துவது இனி சில காலங்களுக்கு எந்த ஒரு அணிக்குமே சவாலான காரியமாக இருக்கும் என்பது போல தெரிகிறது.

ஹாரி ப்ரூக்கின் சாதனை துளிகள்: முதல் 9 இன்னிங்ஸ்களில் 807 ரன்களைக் குவித்த ஹாரி ப்ரூக், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே குறைவான இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவித்த சாதனை வீரர் ஆனார். | டான் பிராட்மேன் போன்ற ஜாம்பவான் உட்பட முதல் 6 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள் கண்ட ஆறு வீரர்களில் ஒருவராக இப்போது ஹாரி ப்ரூக்கும் ஒருவர். | ஹாரி ப்ரூக்கின் இதுவரையிலான டெஸ்ட் ஸ்ட்ரைக் ரேட் 99.3. 812 பந்துகளில் 807 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

சவுதி 700 விக்கெட்: வெலிங்டன் மைதானமும் கிரீன் டாப் பிட்ச்தான். அதனால் நியூஸிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அதற்கு பின்னால் 2 விஷயங்கள் உள்ளன. இங்கிலாந்து 4-வது இன்னிங்ஸை விரட்டினால் எந்த இலக்கும் தவிடுபொடியாகும் என்பது இப்போதைய இங்கிலாந்து பேட்டிங்கின் அச்சுறுத்தல். இன்னொன்று கிரீன் டாப் பிட்சில் நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தால் ஆண்டர்சன், பிராடிடம் வசம் சிக்கி விரைந்து விக்கெட்டுகளை இழக்கக்கூடாது என இங்கிலாந்தை பேட் செய்ய பணித்தார் சவுதி.

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் நியூஸிலாந்து அணியில் டிக்னருக்குப் பதில் மேட் ஹென்றியையும், பேட்டிங்கில் வில் யங்கையும் சேர்த்தது. ஜாக் கிராலி (2 ரன்கள்), ஆலி போப் (10 ரன்கள்) ஆகிய முக்கிய விக்கெட்டுகளை மேட் ஹென்றி வீழ்த்தினார். பிறகு டிம் சவுதி, இங்கிலாந்தின் மற்றொரு அதிரடி வீரர் பென் டக்கெட்டை 9 ரன்களில் வெளியேற்றி தன் 700வது சர்வதேச விக்கெட்டைக் கைப்பற்றினார். டேனியல் வெட்டோரிக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய 2-வது நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த விக்கெட்டுக்காக பிரேஸ்வெல் அருமையான ஒரு கேட்சை எடுத்தது கூடுதல் சிறப்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x