Published : 13 Jul 2014 12:06 PM
Last Updated : 13 Jul 2014 12:06 PM

பிரேசிலுக்கு தீராத் துயரம்: நெதர்லாந்துக்கு உலகக் கோப்பை 3-ம் இடம்

அரையிறுதிப் படுதோல்வி நினைவுகளும், காயங்களுமே மறையாதிருக்கும் வேளையில், பிரேசில் அணி அடுத்த அடியைச் சந்தித்தது. உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரின் 3ஆம் இடத்திற்கான ஆட்டத்திலும் பிரேசில் அணி படுதோல்வியைச் சந்தித்தது.

பிரேசிலியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை ஊதித் தள்ளியது. இந்த முறை அந்த நாட்டின் கால்பந்து ஹீரோ நெய்மார் ஆட்டத்தைப் பார்க்க மைதானத்திற்கு வந்தார். அவர் கண்ணெதிரே இந்த அவலத் தோல்வி ஏற்பட்டுள்ளது பிரேசில் அணிக்கு.

அன்று டிஃபென்சில் ஏற்பட்ட இடைவெளி இன்னும் மறையவில்லை. ஆட்டம் தொடங்கி 3-வது நிமிடத்திற்குள் நெதர்லாந்து அபாய வீரர் வான் பெர்சி பெனால்டி கிக்கில் முதல் கோலை அடித்தார்.

பிறகு மேலும் பழுதடைந்த டிஃபென்ஸ் காரணமாக டேலி பிளைன்ட் 17-வது நிமிடத்தில் 2-வது கோலை அடிக்க, இஞ்ஜுரி நேரத்தில் ஜியார்ஜீனியோ வைனால்டம் என்ற வீரர் 3-வது கோலை அடித்து பிரேசிலின் ஆழமான காயத்தில் மிளகாய்ப்பொடி தூவினார்.

சொந்த மண்ணில் அரிதாகவே தோற்ற பிரேசில் இப்போது அடுத்தடுத்து 2 போட்டிகளில் படுதோல்வி கண்டது. 1940-ற்குப் பிறகு 2 போட்டிகளை சொந்த மண்ணில் தோற்றுள்ளது பிரேசில்.

மேலும், இந்த உலகக் கோப்பையில் 14 கோல்களை வாங்கி இன்னொரு எதிர்மறை சாதனை படைத்துள்ளது பிரேசில். 1986ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு ஒரு அணி இவ்வளவு கோல்களை வாங்கியிருப்பது இதுவே முதல் முறை. அதுவும் போட்டிகளை நடத்தும் நாட்டைச் சேர்ந்த அணி இவ்வளவு கோல்களை வாங்கியதில்லை.

அன்று அர்ஜென்டீனா அணிக்கு எதிராக நெதர்லாந்து இதே ஆக்ரோஷத்துடனும் வேகத்துடனும் ஆடியிருந்தால் இரண்டு லத்தீன் அமெரிக்க அணிகளின் சாம்பியன் ஆசைகளும் நிராசையாகியிருந்திருக்கும்.

இத்தனைக்கும் ஆட்டம் நெதர்லாந்துக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் துவக்கவில்லை. அந்த அணியின் ஸ்னெய்டர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போக அவருக்குப் பதிலாக ஜொனாதன் டி கஸ்மன் என்பவர் விளையாடினார்.

பிரேசில் பயிற்சியாளர் ஸ்கொலாரி 6 மாற்றங்களைச் செய்தார். கேப்டனும் தடுப்பாளருமான தியாகோ சில்வா அணிக்குத் திரும்பினார். ஆனால் தியாகோ சில்வாவின் தடுப்பாட்டமும் சோபிக்காத போன தருணத்தில்தான் 3 நிமிடத்திற்குள்ளாக வான் பெர்சிக்கு பெனால்டி வாப்பு கிடைத்தது.

நெதர்லாந்து அணி ஆட்டம் தொடங்கி ஒரு வேகமான மூவில் பந்து வான் பெர்சிக்கு வர அவர் அதனை அர்ஜென் ராபினுக்கு பாஸ் செய்தார் அங்கு தியாகோ சில்வா அவரை தவறான பகுதியிலிருந்து தடுக்க நினைத்தார், ராபினுக்கு அது நேரடியான கோல் வாய்ப்பாகும், ஆனால் தியாகோ சில்வா அவரைப் பிடித்தி இழுத்தார் இந்த போராட்டம் பாக்ஸிற்கு வெளியேயிருந்து பெனால்டி பகுதி வரைக்கும் நீடித்தது.

இதனைக் கண்ட அல்ஜீரிய நடுவர் டிஜேமல் ஹிமௌவ்டி பென்லாடி கிக் கொடுத்தார். ஆனால் சர்ச்சைக்குரிய முறையில் ஃபவுல் செய்த தியாகோ சில்வாவிற்கு சிகப்பு அட்டைக் காண்பிக்கத் தவறினார் அந்த நடுவர். பெனால்டி கிக்கில் வான் பெர்ஸி, ஜூலியோ சீசருக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. நெதர்லாந்து 1-0 என்று முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் பிரேசில் பகுதியின் இடது பக்கத்தில் நெதர்லாந்து வீரர் கஸ்மன் உள்ளே வெட்டிப் புகுந்து கிராஸ் ஒன்றைச் செய்ய அதனை பிரேசில் வீரர் டேவிட் லூயிஸ் தலையால் தடுக்க நினைக்க பந்து நேராக நெதர்லாந்து வீரர் பிஅளைன்டிடம் வந்தது. அவருக்கு அங்கு பந்தை எடுத்துச் செல்ல நிறைய நேரம் இருந்தது. எடுத்துச் சென்று 12-வது யார்டிலிருந்து கோல் அடித்தார். நெதர்லாந்து 2-0 என்று முன்னிலை பெற்றது.

உற்சாகமில்லாமல் ஆடிய பிரேசில் அணியை மேலும் நோகடிக்க நெதர்லாந்து விரும்பவில்லை என்பதுபோலவே ஆடியது. அன்று ஜெர்மனி இருந்த மன நிலையில் நெதர்லாந்து இருந்திருந்தால் பிரேசிலுக்கு இந்த ஆட்டத்திலும் பெரிய தோல்வியே ஏற்பட்டிருக்கும்.

நெதர்லாந்து தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து பிரேசில் முன்னேறிச் செல்லுமா என்ற சந்தேகமே பெரும்பாலான ஆட்டத்தில் இருந்தது. ஆஸ்கார் மட்டுமே உற்சாகமாக ஆடினார்.

ஒரு மூவில் ஜோ அபாரமாக பந்தை எடுத்துச் சென்று நெதர்லாந்து தடுப்பாட்ட வீரர்கள் 3 பேருக்கும் போக்குக் காண்பித்தார்.பிறகு ஆஸ்காருக்கு பந்தை அடிக்க அவர் கோல் நோக்கி அடித்ததை யாஸ்பர் சிலீசன் தடுத்தார்.

இடைவேளையின் போது 2-0 என்று நெதர்லாந்து முன்னிலை பெற்றது. காயமடைந்த நெய்மாரை பிரேசில் சீருடையில் மைதானத்தில் உட்கார வைத்தது பயிற்சியாளர் ஸ்கொலாரிக்கு அவ்வளவாக நல்ல பெயரை ஏற்படுத்தவில்லை. மேலும் இது நல்ல வெகுஜன மக்கள் உளவியல் அல்ல. ஏற்கனவே தங்கள் ஆசை, நிராசைகளை ஹீரோக்கள் மீது சுமத்தி சுமையைச் சுமந்தும் சுமத்தியும் இருக்கும் ரசிகர்களை வேதனையடையச் செய்யும் விதமாக அவர்களது ஹீரோ நெய்மாரை மைதானத்தில் வந்து அமரச் செய்தது ரசிகரளிடையே நல்ல வரவேற்பைப் பெறவில்லை. மாறாக ஸ்கொலாரி மீது வெறுப்பு இருந்ததையே அவர்களது நடத்தைக் காட்டியது.

உண்மையில் பிரேசில் அணிக்கு ஆதரவூட்டும் மன நிலையில் வந்த ரசிகர்கள் 2வது கோல் விழுந்தவுடன் நெதர்லாந்துக்கு ஆதரவாக மாறியது போல்தான் தெரிந்தது. பாலினியோ காலிற்குப் பந்து வந்ததாகத் தெரியவில்லை. இடைவேளையின் போது அவர் தலையைத் தொங்க போட்ட படி சென்றபோது இந்த ஆட்டத்தில் அவருக்கு உற்சாகமில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

இடைவேளைக்குப் பிறகு ஆஸ்கார் தலைமையில் ஒரு கோல் மூவ் செய்யப்பட்டது ஆனால் அது முறியடிக்கப்பட்டது. மாறாக இஞ்ஜுரி நேரத்தில் வலது புறம் அர்ஜென் ராபின் வேகமாகப் பந்தை எடுத்துச் சென்று சற்றே நிதானித்து ஜன்மாத்திற்கு அடிக்க அவர் பந்தை எடுத்துச் சென்று வைனால்டமிற்கு அடிக்க அவர் 3வது கோலை அடித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.

உலக சாம்பியன் கனவுடன் ஆடிய பிரேசிலின் கடைசி 2 போட்டிகள் அந்த அணியை எழும்ப விடாமல் செய்யும் தோல்வியில் முடிந்துள்ளது. பிரேசில் தனது ஆட்டத்தின் தன்மை குறித்து தீவிரமாக சிந்தித்து மறு பரிசீலனை செய்ய வேண்டிய காலக் கட்டம் வந்து விட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x