Published : 19 Feb 2023 05:01 PM
Last Updated : 19 Feb 2023 05:01 PM

INDvsAUS டெஸ்ட் அலசல்: ஆஸி.யை காலி செய்த ஸ்வீப் ஷாட்கள்; இந்திய அணியின் முழு ஆதிக்கம்!

டெல்லி கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி இரண்டரை நாட்களில் முடிந்துள்ளது. இதற்கு பிட்ச் ஒரு காரணம் என்றால் ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸ் மட்டரகமான பேட்டிங் பிரதான காரணமாகும். பிட்சைக் குறை கூறிப் பயனில்லை. இனி இந்தப் போக்கை யாரும் தட்டிக் கேட்கப்போவதுமில்லை. ஆகவே இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் என்பது ரஞ்சி டிராபியை விடவும் மோசமாக இரண்டரை நாட்கள்தான் என்பது வழக்கமாகி வருவது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

இப்போது சீனியர் வீரர்கள் அஸ்வின், ஜடேஜா, கோலி, ரோஹித் சர்மா இருக்கும் போது பிரச்சனையல்ல. நாளை புதிய அணி ஒன்று உருவாகும்போது இத்தகைய அணுகுமுறை இந்திய கிரிக்கெட்டை அதலபாதாளத்திற்கே இட்டுச் செல்லும் என்ற எச்சரிக்கை தேவை.

61/1 என்று இருந்த ஆஸ்திரேலியா கடைசியில் 28 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பேட்டர்களின் ஷண நேரப் பித்தத்திற்கு இழந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சு இயன் சாப்பல் கூறுவது போல் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. பந்தை கொஞ்சம் நன்றாக தூக்கி வீசுகிறார், பந்தில் சுழல் முன்பை விட அதிகம் இருக்கின்றது.

இதனையடுத்து அவர் இந்த டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசாத்தியமான ஒரு கம்-பேக்-ஐ கொடுத்துள்ளார். ஆனால் முதல் இன்னிங்ஸில் அஸ்வினின் அசாத்திய பந்து வீச்சும் 2வது இன்னிங்சில் ஜடேஜாவை விட அச்சுறுத்தலாகத் திகழ்ந்ததும்தான் ஜடேஜா 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதற்குக் காரணம் என்றால் மிகையாகாது.

இந்தப் பிட்சில் 150க்கும் மேலான எந்த ஸ்கோரும் 4வது இன்னிங்ஸில் விரட்டுவதற்குக் கடினமே. ஆஸ்திரேலியா இன்னும் கொஞ்சம் தங்கள் உத்தியை வடிவமைத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் கர்வத்துடனும் திடசக்தியுடனும் ஆடியிருந்தால் குறைந்தது 175-180 ரன்களை எடுத்திருந்தால் இந்திய அணி நிச்சயம் விரட்டக் கஷ்டப்பட்டிருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு ஒருவேளை வெற்றி வாய்ப்பும் கிட்டியிருக்கும்.

இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் இத்தனை சடுதியில் முடிவடைவது டெஸ்ட் கிரிக்கெட்டை அழிப்பதில்தான் கொண்டு போய் விடும். பந்துகள் உருள்வதை ஸ்பின் பிட்ச் என்று கூறி சப்பைக் கட்டுக் கட்டினால் அது அஸ்வினாக இருந்தாலும் சரி அல்லது சுனில் கவாஸ்கராக இருந்தாலும் சரி அந்தச் சப்பைக்கட்டு நல்லதல்ல. இனி இத்தகைய பிட்ச்களைத் தட்டிக் கேட்பதென்பது ஐசிசி அதிகாரத்தின் கீழும் இல்லை. டெஸ்ட் போட்டிகளை நேரலை ஒளிபரப்பு செய்ய காசைக்கொட்டிக் கொடுக்கும் ஸ்பான்சர்கள் ஏதாவது பிசிசிஐ-யிடம் பேச்சு நடத்தினால்தான் உண்டு. இப்போது பாருங்கள், 5 நாட்கள் என்றுதான் ஸ்பான்சர்கள் ஒளிபரப்பு நிறுவனங்களுக்குக் கொட்டிக் கொடுக்கின்றார்கள்.

இப்போது கடந்த டெஸ்ட் போட்டியின் கடைசி இரண்டேகால் நாட்கள், இப்போது மீதமுள்ள இரண்டரை நாட்களில் பிரைம் டைமில் இந்த டெஸ்ட் முடிந்ததனால் ஒளிபரப்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தையே சந்திக்கும். எனவே இவர்கள் ஏதாவது பிசிசிஐக்கு நெருக்கடி கொடுத்து குறைந்தது 4-ம் நாள் இறுதி வரையிலாவது ஆட்டத்தைத் தொடர பிட்ச் அமைக்குமாறு வலியுறுத்தினால்தான் இத்தகைய ஒரு மோசமான அணுகுமுறைக்கு விடிவு பிறக்கும். நிற்க.

ஸ்வீப் ஷாட்களில் காலியான ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் ஸ்வீப் ஷாட் ஆடப்போய் விழுந்தனவே. அதாவது இந்தப் பிட்ச் பற்றி என்ன கூறப்படுகிறது என்றால் முதல் இரண்டு மணிநேரம் தாக்குப் பிடித்து விட்டால் பிற்பாடு அவ்வளவு அசிங்கமாக செயல்படவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஒரு பாயிண்டை ஆஸ்திரேலியா தவற விட்டனர், 28 ரன்களில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி காலியாயினர்.

ட்ராவிஸ் ஹெட்டை அற்புதமான பந்தில் அஸ்வின் காலி செய்ய, ஸ்டீவ் ஸ்மித் படுமட்டமான ஒரு ஸ்வீப் ஷாட்டை முயன்று எல்.பி.ஆனார். பந்தைப் பார்க்காமலேயே அவர் ஸ்வீப் ஆடப்போனார், மேலும் ஸ்வீப் ஷாட்டின் தாத்பர்யமே, பிட்சில் பந்துகள் மேலும் கீழும் வரும் போது ஆடக்கூடாது, மேலும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகும் பந்துகளை அதுவும் ரீச்சில் இருந்தால் ஆடலாமே தவிர ஸ்டம்ப் நோக்கி வரும் பந்துகளை ஆடினால் பந்து சிக்கவில்லை என்றால் பிளம்ப் எல்.பி.தான். அதுதான் ஸ்மித்திற்கு நடந்தது.

மேத்யூ ரென்ஷா ஆடுவதைப் பார்க்கும் போதே நமக்கே தெரிந்தது, அஸ்வின் இரண்டு பந்துகளை குட்லெந்தில் குத்தி வெளியே திருப்பினார், அடுத்த பந்து நிச்சயமாக அதே லைனில் நேராக வரும் என்பது கணிக்கக் கூடியதே. அப்படி நேராக வந்த பந்தை ஸ்வீப் ஆடப்போய்தான் ரென்ஷா வெளியேறினார். நேர் பந்து, இரண்டு திரும்பும் பந்துகள் பிறகு அதே லெந்தில் அதே ஆக்‌ஷனில் ஒரு பந்தை நேராக விட்டால் போதும் ஆஸ்திரேலியா காலி என்பதை ஜடேஜா, அஸ்வின் இருவருமே மிகத்துல்லியமாகப் பயன்படுத்தினர். லபுஷேனை ஜடேஜா வீழ்த்தியது உருளல் பந்து. அப்படிப்பட்ட பந்தில் அவுட் ஆகும் பேட்டரை நாம் குறை கூற முடியாது. நம்ப முடியாத பிட்சில் ஒரு பந்தை கையில் இறுக்கப் பிடித்து ஷார்ட் ஆக வீசினால் பிட்ச் ஆகி கணுக்காலுக்குக் கீழ் எலிபோல் போய் ஸ்டம்ப் காலியாகும். இது ஜடேஜாவுக்குத் தெரியாதா என்ன? லபுஷேனுக்குத் தெரியவில்லை.

திரும்பும் பந்து நேர் பந்து என்ற மாற்று முறை உத்தியில் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் திரும்பும் பந்தை தொட்டார் கெட்டார். ஸ்லிப்பில் விராட் கோலி கையில் போய் உட்கார்ந்தது. அடுத்த பந்தே ஆஸ்திரேலிய கேப்டன் விட்டேற்றியான, பொறுப்பற்ற முறையில் அனாயாச மட்டைச் சுழற்றல் போல் ஸ்லாக் ஸ்வீப் ஆடி பந்தை விட்டார் இதுவும் உருளல் பந்துதான், ஆனால் கமின்ஸ் ஆடியது மகா மட்டமான ஷாட் பவுல்டு ஆகி வெளியேறினார். இவர் ஆடியதும் ஸ்வீப் முயற்சித் தோல்விதான். 95 ரன்களிலேயே 4 விக்கெட்டுகள் விழுந்தது. 1996 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 99 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வி அடைந்ததே அந்த நினைவைத் தவிர்க்க முடியவில்லை.

அலெக்ஸ் கேரி இன்னும் மோசம். இவர் இந்தப் பிட்சில் போய் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி வெளியேறினார். நேதன் லயன் என்ன செய்வார் பாவம் பிக் ஹிட் ஆடுகிறேன் என்று பரிதாபமாக பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். மேட் குனிமான் இறங்கி ரிவர்ஸ் ஸ்வீப்பில் காலியானார். ஸ்வீப் ஷாட்களில் மட்டும் 6 விக்கெட்டுகளை இழந்தனர், தவறான பந்தத் தேர்வு செய்தது, தவறான ஷாட் தேர்வு.

இந்திய அணி சேசிங்கில் ராகுல் மீண்டும் தோல்வி அடைந்தார், ரோஹித் சர்மா ஆடியதுதான் சரியான அணுகுமுறை 20 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் 31 ரன்கள். மற்றபடி விராட் கோலி, புஜாராவுக்கு ஸ்பின் ஆடுவதில் சிரமம் தெரிகின்றது. விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் கடைசியில் நம்பிக்கை ஊட்டினார். ஆயிரம் சொன்னாலும் முத்ல் இன்னிங்ஸில் அக்சர் படேல் ஆடிய இன்னிங்ஸ்தான் திருப்பு முனை உண்மையில் அவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது கொடுக்க வேண்டும், குழிப்பிட்சில் நன்றாக பேட்டிங் ஆடுபவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது கொடுக்க வேண்டும். இந்தப் பிட்சில் ஜடேஜா, அஸ்வின் போன்றவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் பெரிய பிரயத்தனம் ஒன்றும் இல்லையே.

ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்ஸ் ஆட்டம் முடிந்த பிறகு எந்த ஒரு புகாரும் தெரிவிக்கவில்லை, மாறாக, ‘நாக்பூர் கதைதான் இங்கும் நடந்தது. அஸ்வினும் ஜடேஜாவும் வீசும் போது கடினம்தான்’ என்றார் இதுதான் உண்மையும் கூட.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x