Published : 18 Feb 2023 06:18 PM
Last Updated : 18 Feb 2023 06:18 PM
மவுண்ட் மாங்குனியில் நடைபெறும் நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து அணி தன் 2-வது இன்னிங்ஸில் 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 394 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய நியூஸிலாந்து ஸ்டூவர்ட் பிராட் கையில் பேசிய பிங்க் பந்தின் அதீத இன்ஸ்விங்கர்களுக்கு ஸ்டம்புகளை இழந்தது. 2008-க்குப் பிறகு நியூஸிலாந்தில் டெஸ்ட் வெற்றியை நோக்கி இங்கிலாந்து பயணிக்கின்றது.
முன்னதாக 3-ம் நாளான இன்று 79/2 என்று தொடங்கிய இங்கிலாந்து அணி நியூஸிலாந்து அணியின் அசட்டுத்தனமான ஷார்ட் பிட்ச் பந்து வீச்சை புரட்டி எடுத்தது. ஆலி போப் (46 பந்தில் 49, 5 பவுண்டரி 3 சிக்ஸ்), ஜோ ரூட் (62 பந்தில் 57, 5 பவுண்டரி 1 சிக்ஸ்), ஹாரி பூரூக் (41 பந்துகளில் 54, 7 பவுண்டரிகள் 2 சிக்ஸ்) என்று நியூஸிலாந்து பவுலிங்கை மவுண்ட் மாங்குனியின் நாலாப்பக்கமும் சிதறடித்தனர். இவர்களோடு பென் ஃபோக்ஸ் 51, பென் ஸ்டோக்ஸ் அதிரடி 31, ஆலி ராபின்சன் 39 பங்களிப்பும் சேர இங்கிலாந்து தன் 2வது இன்னிங்ஸில் 5:06 என்ற ரன் ரேட்டில் 74 ஓவர்களில் 374 ரன்களைக் குவித்து நியூசிலாந்துக்கு கடினமான 394 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.
ஆனால், இந்தப் பிட்சில் இதே இங்கிலாந்து 4ஆவது இன்னிங்ஸை ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கும். ஏனெனில் பேட்டிங் பிட்சாக மாறிவிட்டது. ஆனால், இரவு சூழ்நிலைகளில் பிங்க் பந்து அதிகம் ஸ்விங் ஆவதை ஸ்டூவர்ட் பிராட் தன் அசாத்திய திறமையினால் பேச வைத்தார். 4 இங்கிலாந்து வீரர்களின் ஸ்டம்ப்களைப் பறக்க விட்டார். டாம் லேதம் (15), டெவன் கான்வே (2), கேன் வில்லியம்சன் (0), டாம் பிளண்டெட்ல் (1) ஆகியோருக்கு அற்புதமான இன்ஸ்விங்கை வீசி போல்டு செய்தார் பிராட். ஹென்றி நிகோலஸ் ஒரு சேஞ்சுக்கு ராபின்சன் பந்தில் பென் போக்ஸ் கேட்சுக்கு வெளியேறினார். ஆட்ட முடிவில் மைக்கேல் பிரேஸ்வெல் 25 ரன்களுடனும் டேரில் மிட்செல் 13 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
நியூசிலாந்தின் ஷார்ட் பிட்ச் உத்தியும், அடித்த அடியில் கண்ணீர் விட்ட வாக்னரும், இங்கிலாந்தின் காட்டடியும்: இன்று காலை 98 ரன்கள் முன்னிலையுடன் 79/2 என்று தொடங்கிய இங்கிலாந்து அணி இரவுக்காவலன் ஸ்டூவர்ட் பிராட்(7) விக்கெட்டை வாக்னரின் அசாத்திய ஷார்ட் பிட்ச் பவுன்சருக்கு இழந்தது. பிராட் கக்கத்திற்கு எழும்பிய பந்தை தவிர்க்க நினைத்து தோல்வி அடைய பந்து மட்டையில் பட்டு கல்லியில் கேட்ச் ஆனது. ஆனால், அதன் பிறகுதான் ஆலி போப், ஜோ ரூட் சேர்ந்து அடுத்த 7 ஓவர்களில் 62 ரன்களை விளாசித்தள்ளினர்.
குறிப்பாக ஆலி போப், வாக்னரின் பவுன்சர் உத்தியை புரட்டி எடுத்து விட்டார். 3 சிக்சர்களையும் 5 பவுண்டரிகளையும் விளாசிய அவர் 49 ரன்களில் இதே வாக்னரிடம் பிளண்டெல் கேட்ச் எடுக்க வெளியேறினார். இவர் ஆட்டமிழந்த பிறகு அதிரடி மன்னன் ஹாரி புரூக் இணைந்தார். அப்போதாவது ஸ்லிப்களை வைத்து ஸ்டாக் டெலிவரியாக ஷார்ட் பிட்ச் பவுலிங்கை பயன்படுத்தியிருக்கலாம், ஸ்லோ பந்துகள் போட்டிருக்கலாம், யார்க்கர்களை செலுத்தியிருக்கலாம். ஆனால், டிம் சவுதியின் மோசமான கேப்டன்சியில் திக்குத் தெரியாத காட்டில் சிக்கியது போல் ஹாரி புரூக் எனும் புரூட்டிடம் சிக்கினர். தொடக்க 2 மணி நேர ஆட்டத்திலேயே 25 ஒவர்களில் 158 ரன்களை விளாசித்தள்ளியது இங்கிலாந்து.
ரூட் தன் பங்குக்கு அற்புதமாக ஆட ஹாரி புரூக் ஷார்ட் பிட்ச் பவுன்சர்களை ஒதுங்கிக் கொண்டு லாங் ஆன் திசையில் பந்து உடைந்து விடும் போல் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் அடித்து 41 பந்துகளில் அரைசதம் விளாசி 8ஆவது டெஸ்ட் இன்னிங்ஸில் 6ஆவது 50+ ஸ்கோரை அடித்து சாதனை புரிந்தார். 8 இன்னிங்சில் 623 ரன்களை 77.87 என்ற சராசரியில் எடுத்துள்ளார் ஹாரி புரூக்.
ரூட்டும் ஹாரி புரூக்கும் 65 பந்துகளில் 81 ரன்களை அடித்து நொறுக்கினர். ரூட் அரைசதம் எடுத்த பிறகு முதல் இன்னிங்ஸ் போலவே ரிவர்ஸ் ஸ்கூப்பில் ஆட்டமிழந்தார். நீல் வாக்னரை ஒரு ஓவரில் 16 ரன்களையும் இன்னொரு ஓவரில் 3 பவுண்டரி ஒரு சிக்சர் என்று 18 ரன்களையும் விளாசியதில் வாக்னரின் அனாலிசிஸ் கடைசியில் 13 ஓவர் 110 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். டிக்னரிடம் ஒருவழியாக புரூக் ஆட்டமிழந்த உடன் தான் சவுதி கண்ணில் ஒளிபிறந்தது.
தேநீர் இடைவேளையின் போது 237/5 என்று இருந்த இங்கிலாந்து அணி 256 ரன்களைத்தான் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் இதன் பிறகு சுதாரித்ததில் பென் போக்ஸ், ஸ்டோக்ஸ், ராபின்சன் பங்களிப்பில் 374 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. பிரேஸ்வெல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குக்கலெய்ன் என்ற வேகப்பந்து வீச்சாளர் சில ஸ்டன்னிங் பந்துகளை வீசினாலும் இங்கிலாந்து காட்டடியை நிறுத்த முடியாமல் 14 ஓவர்களில் 81 ரன்களை கொடுத்து சாத்து வாங்கினார்.
ஸ்டூவர்ட் பிராட் அட்டகாச ஸ்விங் பவுலிங்- 4 விக்கெட், நான்குமே கிளீன் பவுல்டு: பிங்க் பந்து நியூசிலாந்தின் இரவு வேளையில் பிராட் கையில் பேசியது. முதலில் இடது கை வீரர் டெவன் கான்வே வீழ்ந்தார்.ரவுண்ட் த விக்கெட்டில் வந்து வீசிய பிராட் பந்தை குட் லெந்த்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்தார். பந்து உள்ளே வந்து கொண்டேயிருந்தது. தவறான திசையில் கான்வே ட்ரைவ் ஆட முயன்று பைல்களை இழந்தார்.
அடுத்த அதிர்ச்சி கேன் வில்லியம்சன். இந்த முறை வலது கை வீரருக்கு ஓவர் த விக்கெட்டிலிருந்து ஒரு இன்ஸ்விங்கர், ஆட முடியாத லெந்திலிருந்து வீச முன்காலை நீட்டி ஆட தயங்கினார் வில்லியம்சன். ஆனால், ஆஃப் ஸ்டம்ப் எகிறியது. அடுத்ததாக டாம் லேதம் 15 ரன்களில் ஆடி வந்த போது மீண்டும் ஒரு இன்ஸ்விங்கர் உள்ளே வர பேட் கால்காப்பு இடைவெளியில் புகுந்து ஸ்டம்பைத் தாக்கியது.
அடுத்த பிராட் விக்கெட்டும் போல்டு. இந்த முறை முதல் இன்னிங்ஸில் அட்டகாச சதம் எடுத்த டாம் பிளண்டெல். இந்த முறையும் அருமையான இன்ஸ்விங்கர், பேட் கால்காப்பு இடையே புகுந்து மிடில் ஸ்டம்பைத் தாக்கியது. 4 விக்கெட் 4-ம் பவுல்டு. இன்னொரு விக்கெட், அதாவது நிகோலஸ் விக்கெட்டை ராபின்சன் வீழ்த்த நியூஸிலாந்து 63/5. தோல்வி நிச்சயம். இங்கிலாந்து 2008-ம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் வெற்றி வாய்ப்பைப் பெற்றுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT