Published : 17 Feb 2023 03:30 PM
Last Updated : 17 Feb 2023 03:30 PM

இந்திய கிரிக்கெட் அணி குறித்து சேத்தன் சர்மா பகிர்ந்த 8 பகீர் தகவல்கள்

சேத்தன் சர்மா | கோப்புப்படம்

மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் சேத்தன் சர்மா. அண்மையில் இவர் இந்திய கிரிக்கெட் அணி குறித்த சில பகீர் தகவல்களை பகிர்ந்திருந்தார். இதனை தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் அவர் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020 டிசம்பரில் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார் சேத்தன் சர்மா. இந்திய அணியின் முன்னாள் வீரர் இவர். 23 டெஸ்ட் மற்றும் 65 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். டி20 உலகக் கோப்பை 2021, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசியக் கோப்பை 2022, டி20 உலகக் கோப்பை 2022 உட்பட பல்வேறு தொடர்களுக்கான இந்திய அணியை அவர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்தது.

அவர் அண்மையில் தெரிவித்த அனைத்து தகவல்களும் சர்ச்சையை எழுப்பும் வகையில் இருந்தது. நிச்சயம் அவர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், அவரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கங்குலி, கோலி, ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, பும்ரா என பலர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் தெரிவித்திருந்தார். அது இந்திய அளவில் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட் உலகிலும் கவனம் பெற்றது. சேத்தன் சர்மா பகிர்ந்த 8 பகீர் தகவல்கள்:

> பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலிக்கு முன்னாள் கேப்டன் கோலியை அறவே பிடிக்காது. அதற்காக அவர் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக இருந்தார் எனவும் சொல்ல முடியாது என தெரிவித்தார்.

> பிசிசிஐ-யை விட தன்னை மிகப்பெரிய நபராக முன்னாள் கேப்டன் கோலி கருதியதாக சொல்லியிருந்தார்.

> டி20 போட்டிகளில் ரோகித் சர்மா விளையாட மாட்டார். புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் என தெரிவித்தார். அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும் எனவும் சொல்லி இருந்தார்.

> தங்களை போதுமான உடல் தகுதியுடன் இருப்பதாக காட்டிக்கொள்ள வீரர்கள் ஊசி போட்டுக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

> கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின்போது வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது காயத்தை மறுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

> ஹர்திக், உமேஷ் யாதவ், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் தன் வீட்டுக்கு அண்மையில் வந்திருந்ததாகவும். அவர்கள் தன்னை நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

> கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே ஈகோ இருப்பதாகவும், அதனால் இந்திய அணி இரண்டு குழுக்களாக பிரிந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

> சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் போன்ற வீரர்களின் கரியர் ஆபத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x