Published : 15 Feb 2023 06:13 PM
Last Updated : 15 Feb 2023 06:13 PM
எதிர்வரும் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ள முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரேஸ் வாக்கரான அக்ஷ்தீப் சிங். ராஞ்சியில் தேசிய ஓபன் ரேஸ் வாக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அவர் 20 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 19 நிமிடங்கள் 55 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்துள்ளார். இது தேசிய சாதனையாகவும் அமைந்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள பர்னாலா மாவட்டத்தில் உள்ள கஹ்னேகே கிராமத்தை சேர்ந்தவர் 23 வயதான அக்ஷ்தீப். முந்தைய தேசிய சாதனையாக இருந்த 1:20:16 அவர் தகர்த்துள்ளார். ஆடவர் 20 கிலோ மீட்டர் ரேஸ் வாக்கிற்க்கு பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் என இரண்டுக்கும் தகுதியாக 1:20:10 நேரம் உள்ளது. அதைக்காட்டிலும் 15 நொடிகள் முன்கூட்டியே அவர் பந்தய தூரத்தை கடந்து தகுதி பெற்றுள்ளார்.
“என் அப்பா சிறு விவசாயி. என் அம்மா வீட்டை கவனித்து வருகிறார். எங்களுக்கென எங்கள் கிராமத்தில் கொஞ்சம் நிலம் உள்ளது. சிறு வயது முதலே அப்பாவுடன் நானும் விவசாய வேலைகளுக்கு ஒத்தாசையாக இருப்பேன். வீட்டில் வளர்த்த எருமை மாடுகளின் பாலை அதிகம் பருகுவேன். அது எனக்கு வலிமையை கொடுத்தது. என அப்பாவுக்கு கிடைக்கும் வருமானத்தில் குடும்ப செலவு மற்றும் எனது படிப்பு செலவை சமாளிக்க மிகவும் சிரமப்பட்டார். அதனால் என்னை ராணுவத்தில் சேரும்படி சொல்வார். அதற்காக வேண்டி விளையாட்டில் கவனம் செலுத்த ஊக்கம் கொடுத்தார். நானும் மிடில் டிஸ்டன்ஸ் ஓட்டத்தில் கவனம் செலுத்தினேன்.
2015-ல் இந்திய ராணுவத்தில் சேர தகுதி பெற்றேன். அங்கு குருதேவ் சிங் சாரை சந்தித்தேன். அவர் ரேஸ் வாக் பயிற்சியாளர். அவர்தான் எனக்கு இந்த விளையாட்டில் பயிற்சியையும், ஊக்கத்தையும் கொடுத்தார். பின்னர் 2018 கேலோ இந்தியா விளையாட்டில் பங்கேற்றேன். அதுதான் எனது விளையாட்டு கேரியருக்கு தொடக்கப்புள்ளி என சொல்வேன்.
ஆரம்பத்தில் சில சிரமங்களை எதிர்கொண்டேன். அதை சமாளிக்க அப்பா, அப்பா மற்றும் குருதேவ் சார் உதவினர். கடந்த 2020 முதல் சீனியர் பிரிவில் பங்கேற்று விளையாடி வருகிறேன். அந்த ஆண்டு இதே தேசிய ரேஸ் வாக் சாம்பியன்ஷிப்பில் நான் முதன்முதலாக பங்கேற்று 1:26:12 நேரத்தில் பந்தய தூரத்தை கடந்தேன். 2022-ல் அது 1:23:14 நேரமாக குறைந்தது. தொடர்ந்து பந்தய தூரத்தை 1.20 மணி நேரத்திற்குள் கடக்க வேண்டும் என எண்ணி பயிற்சி செய்தேன்.
வெளிநாட்டு பயிற்சியாளர் கொடுத்த வழிமுறைகளை தீவிரமாக பின்பற்றினேன். எனது இலக்கை நான் நிச்சயம் அடைவேன் என நம்பிக்கை கொண்டிருந்தேன். அதன்படியே இப்போது உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளேன். இப்போது அதற்காக கவனத்துடன் பயிற்சி மேற்கொள்ள உள்ளேன். உலக தரத்தில் எனது செயல்பாடு இந்த இரண்டு விளையாட்டு தொடரிலும் இருக்கும். ஒலிம்பிக்கிற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அதிலும் சிறப்பாக செயல்படுவேன் என நம்புகிறேன்.
அடுத்த நிலையை நோக்கி நாம் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும். 5 நட்சத்திர விடுதியிலும் நான் தூங்கியுள்ளேன். நடைபாதையிலும் நான் தூங்கியுள்ளேன். காமன்வெல்த் போட்டிகளில் பங்குபெற முடியாத துரதிர்ஷ்டத்தை எதிர்கொண்டவன். இன்று நான் படைத்துள்ள இந்த சாதனையை நாளை யாரேனும் தகர்க்கலாம். இருந்தாலும் இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment