Published : 15 Feb 2023 07:03 AM
Last Updated : 15 Feb 2023 07:03 AM

சென்னையில் நட்புரீதியிலான கால்பந்து போட்டி: இந்தியா - நேபாளம் மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை

சென்னை: இந்தியா – நேபாளம் மகளிர் கால்பந்து அணிகள் இடையே நட்புரீதியிலான 2 போட்டிகளை நடத்த பிஃபா ஏற்பாடு செய்துள்ளது. இந்த இரு ஆட்டங்களும் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடத்தப்பட உள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது ஆட்டம் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தியா – நேபாளம் அணிகள் கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் அரை இறுதி ஆட்டத்தில் மோதி இருந்தன. இதில் நேபாளம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. மகளிர் கால்பந்து வரலாற்றில் நேபாள அணியிடம் இந்தியா அடைந்த முதல் தோல்வியாக இது அமைந்தது.

சமீபத்தில் வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெற்ற மகளிருக்கான தெற்காசிய கால்பந்து யு-20 சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் நேபாளத்திடம் வீழ்ந்திருந்தது. இந்த தோல்வியால் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறி இருந்தது.

தற்போது நடைபெற உள்ள நட்புரீதியிலான கால்பந்து போட்டியானது வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய அளவிலான முதற்கட்ட தகுதி சுற்றுக்கு சிறந்த முறையில் தயாராக இந்திய மகளிர் அணிக்கு பெரிய அளவில் உதவக்கூடும் என கருதப்படுகிறது. ஒலிம்பிக் தகுதி சுற்றில் இந்திய மகளிர் அணி ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் துர்க்மேனிஸ்தான், கிர்கிஸ்தான் அணிகளும் உள்ளன.

நேபாளத்துடனான நட்புரீதியிலான கால்பந்து போட்டி குறித்து இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி கூறும்போது, “நாங்கள் தற்போது முடிவுகளை எதிர்நோக்கவில்லை. ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணியை உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கம். நட்புரீதியிலான போட்டிகள் அந்த செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும்.

நேபாளம் சிறந்த அணி. சர்வதேச கால்பந்தின் வேகத்திற்கு எங்கள் அணியின் வீராங்கனைகள் திரும்பி வர இது ஒரு நல்ல வாய்ப்பாகும். நாங்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் சர்வதேச போட்டி, சர்வதேச போட்டிதான். இந்த போட்டியின் வேகம் வித்தியாசமானது, தகுதிச் சுற்றுக்குதயாராவதற்கு இதுவே சிறந்த வழியாகும்” என்றார்.

இந்திய அணியின் நடுகள வீராங்கனையான இந்துமதி கதிரேசன் கூறும்போது, “தேசிய அணிக்காக சொந்த மண்ணில் விளையாடுவது பெருமையாக உள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x