Published : 14 Feb 2023 06:28 PM
Last Updated : 14 Feb 2023 06:28 PM

100-வது டெஸ்ட் போட்டியில் களம் காணும் புஜாரா: கடந்து வந்த பாதை

புஜாரா | கோப்புப்படம்

புது டெல்லி: பாகுபலி முதல் பாகத்தில் அமரேந்திர பாகுபலி, தன்னை நோக்கி வரும் அம்புகளை வாள் கொண்டு அபாராமாக ஒரு காட்சியில் தடுப்பார். அந்தக் காட்சி அப்படியே கிரிக்கெட் களத்தில் அப்ளை செய்தால், அதற்கு கச்சிதமாக பொருந்திப் போகும் பேட்ஸ்மேன் என்றால், அது புஜாரா மட்டுமே. இங்கு பந்துகள்தான் அம்புகள். அவரது பேட்தான் வாள். வரும் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி புஜாரா விளையாட உள்ள 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இதுவரையில் இந்திய அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7,021 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சதங்கள் மற்றும் 34 அரை சதங்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் சராசரி 44.45. மொத்தம் 15,797 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.

டெல்லி போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13-வது இந்தியர் என்ற சாதனையை அவர் படைக்க உள்ளார். கடந்த 2010-ல் இதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுக வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட துவங்கினார்.

தடுப்புமுறை ஆட்டத்திற்கு பெயர் போனவர் இவர். அதனால்தான் அவருக்கு அமரேந்திர பாகுபாலி உடனான அந்த ஒப்பீடு செய்யப்பட்டது. இக்கட்டான சூழலில் அணியின் மீட்பராக செயல்பட்டு விளையாடும் திறன் படைத்தவர். களத்தில் எதிரணி பவுலர்கள் சிறப்பாக வீசும் பந்தை அறிந்து அதை ஆடாமல் அப்படியே லீவ் செய்வதில் தேர்ந்தவர்.

இந்திய அணிக்காக (ஆல்-டைம்) டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர்களில் 8-வது இடத்தில் உள்ளார். இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்க இவரது பார்ம் மிகவும் முக்கியம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,900 ரன்களை சேர்த்துள்ளார். 5 சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் இதில் அடங்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது பேட்டிங் சராசரி 52.77. அதனால் அவரது பேட்டில் வரும் ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தத் தொடரில் இம்சை கொடுக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x