Published : 14 Feb 2023 03:20 PM
Last Updated : 14 Feb 2023 03:20 PM

‘டெஸ்ட் என்பது டி20 போல ஆடப்படுவது அல்ல, பிரதர்!’ - சூர்யகுமாருக்கு சல்மான் பட் அட்வைஸ்

சூர்யகுமார் யாதவ் மற்றும் சல்மான் பட் | கோப்புப்படம்

360 டிகிரி வீரராக டி20 கிரிக்கெட்டில் திகழலாம். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போன்றது அல்ல என இந்திய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவின் நாக்பூர் டெஸ்ட் பேட்டிங் சொதப்பலை விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட்.

அதாவது, டி20 கிரிக்கெட்டின் அணுகுமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுபடாது என்று சூர்யகுமாருக்கு எடுத்து சொல்லியுள்ளார் சல்மான் பட். டெஸ்ட் போட்டிகளில் ஆட்டத்தின் போக்கை ஒரே செஷனில் மாற்றுவதெல்லாம் கடினம். அப்படி மாற்ற முடியும் என்றால் குறைந்தது அதற்கு முந்தைய செஷனில் கிரீசில் பயனுள்ள வகையில் பந்துகளை சந்தித்து பிட்ச், பந்து வீச்சு, களவியூகம் உள்ளிட்ட சூழ்நிலைகளை புரிந்து கொண்டுதான் ஒரு பேட்ஸ்மேனால் ஆட முடியும் என்கிறார் சல்மான் பட்.

ஏன் இங்கிலாந்து உங்கள் ஊரில் வந்து ஒரே நாளில் 528 ரன்களைக் குவித்தனரே, அது டி20 பாணிதானே? என்று இந்திய ரசிகர் ஒருவர் கேட்பதாக வைத்து கொள்வோம், அதற்குச் சல்மான் பட் என்ன கூறுகிறார் என்றால், ‘பாகிஸ்தானில் போடப்பட்டது வெறும் மட்டையாளர்கள் பிட்ச். பேட்டிங் பிட்ச், இங்கு ஆட முடியும். ஆனால், இந்திய சுழற்பந்து வீச்சு பிட்ச்களில் அப்படி ஆட முடியாது’ என்கிறார்.

சல்மான் பட் கூறுவதாவது. “ஒரு பேட்ஸ்மேன் ஒரே செஷனில் எத்தனை முறை ஆட்டத்தை மாற்றியுள்ளார்? ஒரு பந்து வீச்சாளர் ஒரு ஸ்பெல்லில் மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் நிச்சயமாக அதைச் செய்ய முடியும். ஆனால், பேட்ஸ்மேன்களுக்கு கால அவகாசம் தேவை. ஒரு பேட்ஸ்மேனின் கேரியரில் ஒரு செஷனில் புகழ் பெறுவது மிகவும் அரிதாகவே நிகழ்வதாகும். டெஸ்ட் கிரிக்கெட்டின் தன்மை ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் இருந்து வேறுபட்டது.

சூர்யகுமார் யாதவ் ஒரு திறமையான வீரர், அவர் களத்தில் சிறிது நேரம் இருந்தால் ரன் எடுக்க முடியும். அவர் டி20 போட்டி போல விளையாட வேண்டிய அவசியம் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் டி20 போல விளையாட படுவதில்லை. மேலும், அவை பாகிஸ்தான் போன்ற ஃபிளாட் விக்கெட்டுகள் அல்ல. பாகிஸ்தானில் நீங்கள் இங்கிலாந்து செய்ததைப் போல ஆக்ரோஷ அதிரடி பேட்டிங் செய்ய முடியும்” என்கிறார் சல்மான் பட்.

பட் விமர்சனம் ஒருபுறம் இருக்கட்டும். நாம் கேட்பது என்னவெனில் உள்நாட்டு கிரிக்கெட்டில் மாங்கு மாங்கென்று ஆடி தொடர்ச்சியாக ரஞ்சி சீசன்களில் ஆயிரக்கணக்கில் ரன்களைக் குவித்து வரும் சர்பராஸ் கான் என்ன பாவம் செய்தார்? முன்னாள் இந்திய ஸ்விங் பவுலர் வெங்கடேஷ் பிரசாத் அன்று தன் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் கே.எல்.ராகுல் அணியில் நீடிப்பதற்குக் காரணம் இந்திய அணி நிர்வாகம் தங்களுக்குப் பிடித்தவருக்கு வாய்ப்பளிக்கிறது என்றும், பாரபட்சம் பார்க்கிறது என்றும் மிகச்சரியான ஒரு விமர்சனத்தை முன் வைத்தார்.

ஒருபுறம் அணித் தேர்வில் பாரபட்சம். இன்னொரு புறம் ஸ்பான்சர்கள் அதிகம் உள்ள வீரர்கள். ஐபிஎல் புகழ் வீரர்களுக்கு வாய்ப்பு என்றுதான் சென்று கொண்டிருக்கிறது இந்திய அணித்தேர்வு.

சரி சூர்யகுமார் யாதவை ஒரு பரிசோதனை முயற்சியாக தேர்வு செய்கிறோம் என்று கூறுவதை நாம் ஏற்றுக் கொண்டாலும். ராகுலுக்குப் பதிலாக சர்பராஸ் கானை ஆட செய்திருக்கலாம்? முச்சதம் அடித்த கருண் நாயரை அப்படியே ஓரங்கட்டியதைப்போல் வாய்ப்புக் கொடுக்காமலேயே சர்பராஸ் கான் ஓரங்கட்டப்படுவார் என்ற ஐயமே நமக்கு எழுகின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x