

மும்பை: மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் முதல் சீசனுக்கான ஏலம் மும்பை மாநகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனையும், தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவருமான ஹேமலதா தயாளனை வாங்கியுள்ளது குஜராத் ஜெயண்டஸ் கிரிக்கெட் அணி.
ஆல் ரவுண்டரான ஹேமலதா வலது கை பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். சென்னை - வளசரவாக்கம் ஆழ்வார்த்திருநகரை சேர்ந்தவர் இவர். கல்லி கிரிக்கெட் களத்தில் இருந்து தொழில்முறை கிரிக்கெட் விளையாட புறப்பட்டு வந்தவர். கடந்த 2018-ல் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். இதுவரை 9 ஒருநாள் மற்றும் 15 டி20 என சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
28 வயதான அவர் கல்லூரியில் சேர்ந்த பிறகே தொழில்முறை கிரிக்கெட் சார்ந்த பயிற்சிகளை பெற்றார். அதன் பிறகு தமிழ்நாடு அணிக்காக விளையாடி அதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தவர். மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியில் அறிமுக வீராங்கனையாக களம் கண்டார். டி20 கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்தியா அணியில் அறிமுகமானார்.
கடைசியாக கடந்த 2022 அக்டோபரில் இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடி இருந்தார். இந்தச் சூழலில் ஆல் ரவுண்டரான அவரை அவரது அடிப்படை விலையான ரூ.30 லட்சத்திற்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டுள்ளார். குஜராத் அணியின் வழிகாட்டியாக மிதாலி ராஜ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.