Published : 12 Feb 2023 04:40 PM
Last Updated : 12 Feb 2023 04:40 PM

ஆஸ்திரேலிய அணி பயிற்சி செய்ய அனுமதி கோரிய மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு - ஆட்ட உணர்வற்ற செயல்

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நாக்பூர் மைதானத்தில் இன்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில், அந்த மைதானத்தில் தண்ணீரை தெளித்த விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா வெறும் 91 ரன்களில் மடிந்தது. முதல் இன்னிங்சில் ஜடேஜா 5 விக்கெட்டுகளைச் சாய்க்க, 2வது இன்னிங்சில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே கொதகொதவென்று ஆக்கப்பட்ட ரஃப் பகுதியை பயன்படுத்தி அஸ்வின் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதைப் பெரிய பவுலிங் என்று சொல்வதற்கில்லை. ஆஸ்திரேலிய பேட்டர்களின் போதாமைதான் இதற்குக் காரணம்.

வங்கதேசத்தில் அறிமுக டெஸ்ட்டில் ஆடிய ஜாகிர் ஹசன், மிக அருமையாக அஸ்வின் உள்ளிட்டோரை எதிர்கொண்டு சதமடிக்க முடியும் போது வார்னர், கவாஜா, லபுஷேன், ஸ்மித் ஆகியோர் பொத் பொத் என்று மடிவதை புரிந்து கொள்ள முடியவில்லை. அஸ்வின் ஆதிக்கம் செலுத்த இவர்கள் அனுமதித்தார்கள் என்றே கூற வேண்டும்.

எப்படியும் இதே நாக்பூர் போன்ற பிட்ச்தான் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் போடப்படும் என்று தெரிந்ததால் ஆஸ்திரேலியா இன்று நாக்பூரில் தங்கி அதே வலைப்பயிற்சி பிட்ச், மற்றும் டெஸ்ட் நடந்த பிட்சில் பயிற்சி செய்ய கோரிக்கை வைத்தனர். பிட்சை அப்படியே விட்டு விடுமாறும் ஒரு செஷன் அங்கு பயிற்சி செய்து கொள்கிறோம் என்றும் விதர்பா கிரிக்கெட் சங்கத்திடம் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் கோரிக்கையை ஏற்காமல் இரவோடு இரவாக பயிற்சி பிட்ச், ஆட்டம் நடந்த பிட்ச் இரண்டிலும் தண்ணீர் பாய்ச்சி பயிற்சி செய்வதற்கு லாயக்கில்லாமல் செய்து ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை படுமட்டமாக நிராகரித்துள்ளனர் விதர்பா கிரிக்கெட் சங்கத்தினர்.

அனைத்துப் பிட்ச்களிலும் தண்ணீர் பாய்ச்சப்பட்டதால் பயிற்சி ரத்து செய்யப்பட்டதை பெரும் பின்னடைவாகப் பார்க்கிறது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம். ஜடேஜா, அஸ்வின் கூட்டணி ஆஸ்திரேலிய அணியை 177 மற்றும் 91 ரன்களுக்குச் சுருட்டிய பிட்சில் பயிற்சி மறுக்கப்பட்டது நிச்சயம் சர்ச்சைகளைக் கிளப்பவே செய்யும் என்பதோடு, ஒரு நாட்டு அணி இங்கு வருகிறது என்றால் அவர்கள் நம் விருந்தாளிகள், அவர்களுக்கான வசதி வாய்ப்புகளையும் கிரிக்கெட்டுக்கு தோதான பயிற்சி ஏற்பாடுகளையும் செய்வது டெஸ்ட் போட்டியை நடத்தும் வாரியத்தின் முதற்கடமை. ஆனால் இங்கு விதர்பா கிரிக்கெட் சங்கம் கடமையை மறந்துவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x