Published : 12 Feb 2023 04:25 AM
Last Updated : 12 Feb 2023 04:25 AM
நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மார்னஷ் லபுஷேன் 49, ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா 5, அஸ்வின் 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 114 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 23, சேதேஷ்வர் புஜாரா 7, விராட் கோலி 12, சூர்யகுமார் யாதவ் 8, ரோஹித் சர்மா 120, கர் பரத் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 66, அக்சர் படேல் 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 139.3 ஓவர்களில் 400 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜடேஜா 185 பந்துகளில்,
9 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் டாட் மர்பி பந்தில் போல்டானார். அக்சர் படேலுடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு ஜடேஜா 88 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய மொகமது ஷமி அதிரடியாக விளையாடினார். மட்டையை சுழற்றிய அவர், 47 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் விளாசிய நிலையில் மர்பி பந்தில் அலெக்ஸ் கேரியிடம் பிடிகொடுத்து வெளியேறினார். அக்சர் படேலுடன் இணைந்து மொகமது ஷமி 9-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தார். கடைசி விக்கெட்டாக அக்சர் படேல் 174 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் போல்டானார்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான டாட் மர்பி 7 விக்கெட்களையும், பாட் கம்மின்ஸ் 2, நேதன் லயன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழல் வலையில் சிக்கியது. உஸ்மான் கவாஜா (5), டேவிட் வார்னர் (10), மேட் ரென்ஷா (2), பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் (6), அலெக்ஸ் கேரி (10) ஆகியோர் அஸ்வின் பந்தில் நடையை கட்டினர். மார்னஷ் லபுஷேன் 17 ரன்களில் ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
64 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலிய அணி அதன் பின்னர் மீள முடியாமல் போனது. பாட் கம்மின்ஸ் ஒரு ரன்னில் ஜடேஜா பந்திலும், டாட் மர்பி 2 ரன்னில் அக்சர் படேல் பந்திலும் நடையை கட்டினர். நேதன் லயன் (8), ஸ்காட் போலண்ட் (0) ஆகியோரை மொகமது ஷமி வெளியேற்றினார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 32.3 ஓவர்களில் 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஸ்டீவ் ஸ்மித் 51 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5, ஜடேஜா 2, மொகமது ஷமி 2, அக்சர் படேல் ஒரு விக்கெட் கைப்பற்றினர். இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்ர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. பேட்டிங்கில் 70 ரன்களும், பந்து வீச்சில் இரு இன்னிங்ஸையும் சேர்த்து 7 விக்கெட்கள் வீழ்த்திய ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்வானார். 2-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது.
அஸ்வினின் 31-வது ‘5’: நாக்பூர் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அஸ்வின் 37 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் ஓர் இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்துவது இது 31-வது முறையாகும். அதிலும் சொந்த மண்ணில் 25-வது முறையாகும். இதன் மூலம் அனில் கும்ப்ளேவின் சாதனயை சமன் செய்துள்ளார் அஸ்வின். அனில் கும்ப்ளே சொந்த மண்ணில் 115 இன்னிங்ஸ்களில் 25 முறை 5 விக்கெட்களை வேட்டையாடி இருந்தார். அஸ்வின் 101 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை சமன் செய்துள்ளார். உலக அரங்கில் சொந்த மண்ணில் அதிக முறை 5 விக்கெட்களை சாய்த்தவர்களின் பட்டியலில் முரளிதரன் (45), ரங்கனா ஹெராத் (26) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
மிரட்டிய ஷமி..: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொகமது ஷமி பேட்டிங்கில் அசத்தினார். டாட் மர்பி பந்து வீச்சுக்கு எதிராக ஸ்லாக் ஸ்வீப், மிட் விக்கெட், லாங் ஆஃப் திசைகளில் சிக்ஸர் பறக்கவிட்டார். 65 நிமிடங்கள் களத்தில் நின்ற அவர், 9-வது விக்கெட்டுக்கு அக்சர் படேலுடன் இணைந்து 52 ரன்களை சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு கடும் அதிர்ச்சி கொடுத்தார்.
ஜடேஜாவுக்கு அபராதம்: நாக்பூரில் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பந்து வீச்சின் போது இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, சக வீரரான மொகமது சிராஜிடம் இருந்து வலி நிவாரணி க்ரீமை வாங்கி இடது கை ஆள்காட்டி விரலில் தடவினார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜடேஜாவுக்கு போட்டியின் ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐசிசி. களநடுவரிடம் தகவல் தெரிவிக்காமல் வலி நிவாரணியை ஜடேஜா பயன்படுத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
‘எதிர்பார்க்கவில்லை’: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “3 நாட்களுக்குள் போட்டி முடிவடையும் என எதிர்பார்க்கவில்லை. பந்து வீச்சில் ஒவ்வொரு அமர்வாக செலவிட தயாராக இருந்தோம். ஆஸ்திரேலிய அணி ஒரே அமர்வில் ஆட்டமிழந்து விடுவார்கள் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆடுகளத்தின் தன்மை மெதுவாக மாறிக் கொண்டே சென்றது. பந்துகள் எழவில்லை. இது எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் மனநிலை என்னவென்று எனக்கு தெரியாது. ஆனால் எங்கள் அணி உறுதியாக இருந்தது.
கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாகவே இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடி வருகிறோம். பயிற்சியின் போது சிறந்த முறையில் தயாராகி இருந்தோம். எப்போது சிறந்த முறையில் தயாராகும்போது கிரிக்கெட்டில் மட்டும் அல்ல எல்லா இடங்களிலும் நம்பிக்கை கிடைக்கும்” என்றார்.
‘அதிகம் சுழலவில்லை’: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறும்போது, “இந்தியாவில் சில நேரங்களில் விளையாட்டு மிக விரைவாக நகர்கிறது. இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். பந்துகள் சுழலும் போது சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் கடினமாக உழைப்பார்கள். ரோஹித் சர்மா நன்றாக விளையாடினார். முதல் இன்னிங்ஸில் பந்துகள் சுழன்றது. ஆனால் விளையாட முடியாத அளவுக்கு சுழலவில்லை.
இன்னும் கூடுதலாக 100 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். பேட்டிங்கில் தொடக்கம் கடினமானது, ஆனால் எங்கள் பேட்ஸ்மேன்களில் 3 முதல் 4 வீரர்கள் சிறப்பாக தொடங்கினர். சிறப்பான தொடக்கம் கிடைத்தால் அதை பெரிய அளவில் மாற் வேண்டும். அது நிகழவில்லை. சுழற்பந்து வீச்சில் மர்பி சிறப்பாக செயல்பட்டார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT