Published : 11 Feb 2023 05:16 PM
Last Updated : 11 Feb 2023 05:16 PM

இந்தியாவிடம் போராடாமல் ஆஸ்திரேலியா சரண் ஏன்? - நாக்பூர் டெஸ்ட் அலசல்

பிட்ச் சர்ச்சைகளெல்லாம் ஓய்ந்து விடும் என்று கருதினாலும் மீண்டும் நிச்சயம் நாக்பூர் டெஸ்ட் பற்றி எழுக்கூடும். இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களைக் குவிக்க முடிந்த பிட்சில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 32.3 ஓவர்கள்தான் ஆட முடிந்துள்ளது. 91 ரன்களில் சுருண்டு ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை வெறும் பிட்சைக் குற்றம்சாட்டி தப்பிக்க முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும்.

ரவீந்திர ஜடேஜாவின் முன்னேற்றமடைந்த இடது கை ஸ்பின் பவுலிங், அவரது மேலும் சீரடைந்த பேட்டிங் மற்றும் ரோஹித் சர்மாவின் அனாயசமான சதம், ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பாடம் எடுத்த அக்சர் படேலின் 84 ரன்கள், ஷமியின் ஆக்ரோஷ 37 ரன்கள் (2 பவுண்டரி 3 சிக்சர்கள்) ஆகியவையும், ஆஸ்திரேலிய தரப்பினர் புகார் எழுப்பும், இதே பிட்சில்தான் சாத்தியமாகியுள்ளது, என்பதற்கு எந்த தரப்பும் எந்த சால்ஜாப்பும் சொல்லி தப்பித்து விட முடியாது.

காரணம், ஆஸ்திரேலியர்கள் மண்டைக்குள் பிட்ச் பற்றிய சரியான தரவுகள் நிலைக்காமல், பூதம் புகுந்தது போல் ஆடினர். பிட்சில் பூதமில்லை. ஆஸ்திரேலிய பேட்டர்களின் மண்டைக்குள்தான் பூதம் புகுந்து கொண்டு விட்டது. நல்ல டாஸில் வென்றார் பாட் கமின்ஸ். முதல் நாள் பிட்ச் அவ்வளவு மோசமில்லை என்று இயன் சாப்பலே சான்றிதழ் வழங்கி விட்டார். உண்மைதான் முதல் நாள் பிட்ச் பேட் செய்ய முடியாத பிட்ச் அல்ல.

ஆனால், ஆஸ்திரேலிய வீரர்களில் லபுஷேன், ஸ்மித் மட்டுமே நிலைத்தனர். அவர்களும் பெரிய இன்னிங்ஸை ஆட முடியவில்லை. தவறான ஷாட்கள், ஸ்பின்னை எதிர்கொள்ள சரியான உத்தியின்மை ஆகியவற்றால் முதல் இன்னிங்சில் கொஞ்சம் சுமாரான ஸ்டார்ட் செய்த பேட்டர்கள் கூட சரியான உத்தியில் ஆடாமலும் ஷாட் தேர்வில் சோடை போயும் ஆட்டமிழந்து 177 ரன்களுக்குச் சுருண்டது.

உண்மையில் முதல் இன்னிங்ஸிலேயே ஆஸ்திரேலியா தோற்று விட்டது. கமின்ஸ் போட்டி முடிந்து கூறிய போது, பிட்ச் உடைவதற்கு முன்பாக இன்னும் 100 ரன்களைக் கூடுதலாக முதல் இன்னிங்ஸில் எடுத்திருந்தால், அதாவது 300 ரன்களை ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் எடுத்திருந்தால் இந்திய அணியை ஒரு கட்டத்தில் 168/5 என்ற நிலைக்கு கொண்டு வந்த போது நிச்சயம் நாம் பிரஷர் ஆகியிருப்போம். அது இல்லாமல் போனது. 168/5 என்ற ஸ்கோருக்குப் பிறகு ஆஸ்திரேலியா ஆட்டத்தைக் கோட்டை விட்டதென்னவோ உண்மை.

நடுவர்களின் உதவிகள்: ஜடேஜா குறைந்தது இருமுறை பிளம்ப் எல்.பி.ஆனார். அதற்கு கள நடுவர் கையை உயர்த்தியிருந்தால், ஜடேஜா ரிவியூ செய்திருந்தால் கூட அவுட். ஆனால் கள நடுவர் ஆஸ்திரேலியா பவுலிங் போடும் போது எல்.பி.தீர்ப்புகளுக்கு நாட் அவுட், நாட் அவுட் என்று கூறிவிட்டு, இந்தியா பவுலிங் செய்யும்போது பேடில் பட்டதெற்கெல்லாம் கையை உயர்த்திய போக்கும் இருக்கவே செய்தது. ஜடேஜா இருமுறை அவுட், இருமுறையும் நடுவர்தான் அவரைக் காப்பாற்றினார்.

இதுமட்டுமல்ல பொதுவாக இந்திய கேப்டனுக்கு எல்.பி. கொடுக்கக் கூடாது என்பது கோலி கேப்டனாக இருந்தது முதலே பார்த்து வருகின்றோம், அதற்கு முன்பு அப்படி கிடையாது, இப்போது ரோஹித் சர்மாவுக்கும் நடுவர் அவுட் கொடுப்பதில்லை. ஆனால் இவையெல்லாம் சற்றே நுணுக்கமாகப் பார்ப்பவர்களுக்குக் கிட்டிய விஷயங்கள்.

ஆனால் 91 ரன்களுக்குச் சுருண்ட ஆஸ்திரேலியா, இந்தியாவை 168 ரன்களுக்கு 5 விக்கெட் என்று ஒரு சரிவு நிலைக்குக் கொண்டு வந்த பிறகு 400 அடிக்க விட்டதால்தான் ஆஸ்திரேலியா தோல்வி தழுவியது என்னவோ உண்மை. அதே போல் அம்பயரிங் தரமும் புகாருக்கு இடமின்றி மேம்பட வேண்டிய கட்டாயமும் உள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கெட்டில் 6 எல்.பி.டபிள்யூக்கள் என்பது நல்ல அம்பயரிங்குக்கான விஷயம் அல்ல என்பது அனைத்து கிரிக்கெட் வல்லுநர்களும் கூறும் ஒன்றுதான். ஆஸ்திரேலிய வீரர்கள் லபுஷேன், ரென்ஷா, ஆகியோர் ஃபுல் லெந்த் பந்துக்கு கிரீசுக்குள் இருந்து ஆடி தவறிழைத்தனர். வார்னர் ரிவியூ செய்தார், அம்பயர்ஸ் கால் என்று வந்தது. குறிப்பாக லெக் ஸ்டம்பில். இதனை நடுவர் கையை உயர்த்தாமல் இருந்திருந்தால் நாட் அவுட் தான்.

அலெக்ஸ் கேரி அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார். கால் கேப்பில் பட்டு எல்.பி. ஆனார். கடைசியில் ஸ்காட் போலண்ட் எல்.பி. கூட அம்பயர்ஸ் கால்தான். நடுவர் கையை உயர்த்துவதில் கொஞ்சம் பாரபட்சம் இருக்கவே செய்கிறது என்பதை மறுக்க முடியாது.

ஆஸ்திரேலியாவின் உத்தி ரீதியான தவறுகள்: முதல் இன்னிங்ஸில் இன்னும் கொஞ்சம் தங்களை அப்ளை செய்து 300 ரன்கள் பக்கம் எடுத்திருக்க வேண்டும். கவாஜா இருப்பதிலேயே ஸ்பின் நன்றாக ஆடக்கூடியவர். அவர் ட்ரைவ் ஆடி எட்ஜ் ஆகி வெளியேறினார். முதல் இன்னிங்ஸில் இவர் அவுட் தீர்ப்பு சந்தேகமானதே. பந்து லெக் ஸ்டம்ப் அருகே கொஞ்சம் வெளியே ஸ்விங் ஆகும்போது ரிவியூவில் எப்படி ஸ்டம்பைத் தாக்கும் என்று தெரியவில்லை. சில பல கோளாறுகள் உள்ளவே செய்கின்றன. ஆனால் ஆஸ்திரேலியா தோற்றது அதன் பேட்டிங் மற்றும் பவுலிங் போதாமையினாலே.

அணித்தேர்வில் அதிரடி இடது கை வீரர் ட்ராவிஸ் ஹெட்-ஐ ட்ராப் செய்தது மிகத்தவறான முடிவு. ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்த்திருக்கலாம். இன்னொன்று ஆஸ்திரேலியாவின் முன்னிலை ஸ்பின்னர் நேதன் லயன் இந்த மேட்சில் ஒன்றுமில்லாமல் போனது, ஒன்றுமேயில்லாமல் வீசியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

வலது கை பேட்டர்களுக்கு அவர் முக்கால்வாசி ‘ரவுண்ட் த விக்கெட்டில்’ வீசியது மிகப்பெரிய உத்தி ரீதியான தவறு. ஏனெனில் இந்திய பேட்டர்களுக்கு ஸ்டம்பில் வீசினால் செமயாக ஆடுவார்கள். அதுதான் நடந்தது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஜெஃப்ரி பாய்காட் கூறும் ‘நிச்சயமின்மையின் பகுதி’யில் வீசி உள்ளேயோ வெளியேயோ கொண்டு செல்ல வேண்டும் அப்போதுதான் இங்கு விக்கெட் எடுக்க முடியும்.

வங்கதேசத்தில் மெஹதி ஹசன் மிராஸ் இந்திய பேட்டிங் வரிசையைப் பாடாய் படுத்தியதையாவது நேதன் லயன் பார்த்திருக்க வேண்டும். மேலும் இடது கை ஸ்பின்னருக்கு தோதாக பிட்சை டாக்டரிங் செய்கிறார்கள் என்று இந்தியா மீது குற்றச்சாட்டு வைத்த ஆஸ்திரேலியா இடது கை ஸ்பின்னர் ஆஷ்டன் ஆகரைத் தேர்வு செய்யாமல் விட்டது ஏன் என்ற கேள்வியும் எழுகின்றது.

மேலும் கமின்ஸுக்கு இந்த வகை பிட்ச்களில் கேப்டன்சி அனுபவம் போதாதது என்பதால் லயன் வீச வந்தவுடனேயே,ஸ்பின் வீச வந்தவுடனேயே லாங் ஆன், லாங் ஆஃப் இரண்டையும் வைத்து வீசியது பெரும் தவறு. ஏதாவது ஒன்றை வட்டத்திற்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்திய பேட்டர்கள் ஓவர் த டாப் அடிக்கப் போய் ஏதாவது தவறிழைத்திருப்பார்கள். எடுத்த எடுப்பிலேயே சிங்கிள்கள் எடுக்க உதவிகரமாக லாங் ஆன், லாங் ஆப் வைத்தது ஒரு பெரிய தவறு.

அறிமுக பவுலர் மர்ஃபியிடம் 7 விக்கெட்டுகளை கொடுத்ததை வைத்து அடுத்த டெஸ்ட்டில் அவரை வைத்து ஆஸ்திரேலியா திட்டம் தீட்டினால் அடுத்த டெஸ்ட்டில் அவரும் சாத்து வாங்குவார். நேதன் லயன் மட்டுமே இந்திய அணியை சுருட்ட முடியும். வேகப்பந்து வீச்சைக் கொண்டும் இந்திய அணியை வீழ்த்தலாம். ஆனால் முதலில் ஸ்கோர்போர்டில் ரன்கள் வேண்டும், ஆகவே ஆஸ்திரேலியாவின் பிரதான பிரச்சனை அதன் பேட்டிங்தான்.

இப்போதைக்கு ஆஸ்திரேலியா 4-0 என்று தொடரை முழுதும் இழக்கும் என்றே தெரிகிறது. ஆட்ட நாயகனாக மிகச்சரியாக ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x