Published : 11 Feb 2023 05:42 AM
Last Updated : 11 Feb 2023 05:42 AM
நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசினார். ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் அரை சதம் அடித்தனர்.
நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி முதல்இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக மார்னஷ் லபுஷேன் 49, ஸ்டீவ் ஸ்மித் 37, அலெக்ஸ் கேரி 36, பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 31 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா 5, அஸ்வின் 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 24 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 56, அஸ்வின் ரன் ஏதும் எடுக்காத நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். நேதன் லயன் வீசிய 33-வது ஓவரில் அஸ்வின் மிட்விக்கெட் திசையில் சிக்ஸர் விளாசினார். சிறப்பாக விளையாடி வந்த அஸ்வின் 62 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் டாட் மர்பி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய சேதேஷ்வர் புஜாரா 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். தளர்வாக லெக் ஸ்டெம்புக்கு வெளியே மர்பி வீசிய பந்தை புஜாரா ஸ்வீப் ஷாட் விளையாடிய போது ஷார்ட் பைன் லெக் திசையில் ஸ்காட் போலண்டிடம் கேட்ச் ஆனது. இதன் பின்னர் களமிறங்கிய விராட் கோலியும் எளிதாக ஆட்டமிழந்தார். லெக் ஸ்டெம்புக்கு வெளியே மர்பி வீசிய பந்தை விராட் கோலி தொட முயன்ற போது அது மட்டையில் உரசி விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆனது. விராட் கோலி 26 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் சேர்த்தார்.
அறிமுக வீரரான சூர்யகுமார் யாதவ் (8), நேதன் லயன் ரவுண்ட் தி விக்கெட்டில் இருந்து ஆஃப் ஸ்டெம்பை நோக்கி தூக்கி வீசிய பந்தை டிரைவ் ஆட முயன்று போல்டானார். 168 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த போதிலும் தற்காப்பு ஆட்டம், தாக்குதல் ஆட்டம் என சரியான கலவையில் பதிலடி கொடுத்துக்கொண்டே மட்டையை வீசிய ரோஹித் சர்மா 171 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் தனது 9-வது சதத்தை அடித்தார்.
63-வது ஓவரின் முடிவில் இந்திய அணி முன்னிலை பெறத் தொடங்கியது. 81-வது ஓவரில் புதிய பந்து எடுக்கப்பட்டது. பாட் கம்மின்ஸ் வீசிய 3-வது பந்தில் ரோஹித் சர்மா கொடுத்த கேட்ச்சை சிலிப் திசையில் ஸ்மித் தவறவிட்டார். எனினும் அடுத்த பந்தில் ரோஹித் சர்மா போல்டானார். 212 பந்துகளை சந்தித்த அவர், 2 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் சேர்த்தார்.
6-வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் இணைந்து ரோஹித் சர்மா 61 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து களமிறங்கிய கர் பரத் 8 ரன்களில் மர்பி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 240 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் ஜடேஜாவுடன் இணைந்த அக்சர் படேல் பார்னர்ஷிப்பை கட்டமைத்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கு எதிராக எந்தவித அழுத்தமும் இல்லாமல் சீராக ரன்கள் சேர்த்தது.
ஜடேஜா தனது 18-வது அரை சதத்தையும், அக்சர் படேல் 2-வது அரைசதத்தையும் கடந்தனர். 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 114 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 170 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், அக்சர் படேல் 102 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 185 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான டாட் மர்பி 36 ஓவர்களை வீசி 9 மெய்டன்களுடன் 82 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். கைவசம் 3 விக்கெட்கள் இருக்க 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
ரோஹித் சர்மா சாதனை: நாக்பூர் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோஹித் சர்மா. இந்த வகையில் உலக அரங்கில் இலங்கையின் திலகரத்னே தில்ஷான், தென் ஆப்பிரிக்காவின் டு பிளெஸ்ஸிஸ், பாகிஸ்தானின் பாபர் அஸம் ஆகியோர் ஏற்கெனவே டி 20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்திருந்தனர்.
கேப்டனாக முதல் சதம்..: நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா 120 ரன்கள் விளாசி அசத்தினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் இது அவருக்கு 9-வது சதமாக அமைந்தது. அதேவேளையில் கேப்டனாக அவர், அடித்த முதல் சதம் இதுவாகும்.
சேப்பாக்கம் நினைவுகள்..: நாக்பூரில் ரோஹித் விளையாடிய விதம் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியை நினைவுப்படுத்தும் வகையில் இருந்தது. அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழக்க ரோஹித் சர்மா, சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அற்புதமாக விளையாடி 161 ரன்கள் விளாசியிருந்தார். அதேபோன்று தற்போதும் நாக்பூரில் அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
அறிமுக டெஸ்டில் 5...: நாக்பூர் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் ஆஸ்திரேலிய அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான டாட் மர்பி 5 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய 4-வது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மர்பி. இதற்கு முன்னர் பீட்டர் டெய்லர் (இங்கிலாந்துக்கு எதிராக 78/6), ஜேசன் கிரெஜா (இந்தியாவுக்கு எதிராக 215/8), நேதன் லயன் (இலங்கைக்கு எதிராக 34/5) ஆகியோர் தங்களது அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தியிருந்தனர்.
பந்தை சேதப்படுத்தினாரா ஜடேஜா?: நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது ரவீந்திர ஜடேஜா, மொகமது சிராஜிடம் இருந்து திரவம் போன்ற பொருளை வாங்கி தனது இடது ஆள்காட்டி விரலில் தடவினார். அந்த நேரத்தில் பந்தை கையில் வைத்திருந்தாலும், ஜடேஜா அதில் எதையும் தேய்க்கவில்லை.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பலர் குற்றசாட்டுகளை முன்வைத்தனர். இதுதொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் உள்ளிட்ட சில வீரர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்கிடையில், ஜடேஜா தனது பந்துவீச்சு கையின் ஆள்காட்டி விரலில் வலி நிவாரணி க்ரீம் தடவி வருவதாக இந்திய அணி நிர்வாகம் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டிடம் தெரிவித்தது. இதனால் இந்த விவகாரம் பெரிய அளவில் பூதாகரமாகவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT