Published : 10 Feb 2023 09:06 PM
Last Updated : 10 Feb 2023 09:06 PM

IND vs AUS | கோலியின் விக்கெட் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்: ஆஸி. ஸ்பின்னர் டாட் மர்ஃபி

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாட் மர்ஃபி

நாக்பூர்: பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் அறிமுக ஸ்பின்னர் டாட் மர்ஃபி.

22 வயதான அவர் விக்டோரியாவைச் சேர்ந்த ஆஃப் ஸ்பின்னர். 7 முதல் தர போட்டி மற்றும் 14 லிஸ்ட் ஏ போட்டிகள் என உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் விளையாடி உள்ளார். பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். இந்த நிலையில்தான் இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

அந்த இடத்திற்கான ரேஸில் ஆடம் சாம்பா போன்ற சீனியர் வீரர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அணியில் இடம்பிடித்த மர்ஃபி இந்திய அணிக்கு எதிரான முதல் தொடரில் அறிமுக வீரராக களம் கண்டார். தன் நாட்டுக்காக விளையாட வேண்டுமென்ற அந்த கனவை மெய்ப்பித்த போது முதல் இன்னிங்ஸில் இதுவரை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். கே.எல்.ராகுல், அஸ்வின், புஜாரா, விராட் கோலி மற்றும் ஸ்ரீகர் பரத் விக்கெட்டுகளை கைப்பற்றி தன் அணிக்கு உதவியுள்ளார்.

“ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்த போது குறைந்தது ஒரு விக்கெட்டையாவது கைப்பற்றுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால், அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதில் மகிழ்ச்சி. ஆட்டத்திற்கு முன்பு உள்ளூர் கிரிக்கெட்டில் நான் செய்து வருவதை செய்தால் மட்டும் போதும். வேறு எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என என்னிடம் சொல்லி இருந்தார்கள். அதைத்தான் நானும் செய்தேன். இந்த நேரத்தில் என் குடும்பம் என்னுடன் உள்ளது மனநிறைவை தருகிறது.

நீண்ட நாட்களாக பார்த்து வந்த ஹீரோவான கோலியின் விக்கெட்டை கைப்பற்றியது ரொம்பவே ஸ்பெஷல். அவரது விக்கெட்டை வீழ்த்திய அந்த பந்து சிறப்பாக வீசப்பட்ட பந்து அல்ல. அவர் பேட் செய்ய வந்த போது மைதானம் முழுவதும் ஆரவாரம் அதிகம் இருந்தது. அந்த காட்சி என்றென்றும் என்னுள் இருக்கும்.

ஜடேஜா - அக்சர் படேல் பார்ட்னர்ஷிப் அமைவதற்கு முன்பு வரை ஆட்டத்தில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது. அவர்களை விரைந்து அவுட் செய்து நாங்கள் பேட் செய்ய வேண்டும்” என இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு மர்ஃபி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x