Published : 09 Feb 2023 06:21 PM
Last Updated : 09 Feb 2023 06:21 PM
மூட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு களம் கண்ட முதல் சர்வதேச போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதில் மகிழ்ச்சி என இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார். நாக்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
34 வயதான ஜடேஜாவுக்கு மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த செப்டம்பரில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 5 மாதத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய முதல் போட்டியில் தனது ஆதிக்கத்தை அவர் நேரடியாக செலுத்தியுள்ளார். இதன்மூலம் இந்திய அணியை இந்தப் போட்டியில் வலுவான நிலைக்கு அழைத்து சென்றுள்ளார். அதுவும் எதிரணியின் பேட்டிங் படைத்தளபதிகளாக உள்ள லபுஷேன் மற்றும் ஸ்மித் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி மிரட்டி இருந்தார்.
“நான் பந்து வீசிய விதத்தில் எனக்கு மகிழ்ச்சி. அதை சுகானுபவமாக அனுபவித்து விளையாடி இருந்தேன். ஐந்து மாதத்திற்கு பிறகு களம் திரும்பி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது கடினமானது. அதற்கு நான் தயார் நிலையில் இருந்தேன். தேசிய கிரிக்கெட் அகாடமியில் எனது திறன் சார்ந்து கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ரஞ்சி போட்டியில் விளையாடி இருந்தேன். அதில் 42 ஓவர்கள் வரை பந்து வீசி இருந்தேன். அது எனக்கு நிறையவே நம்பிக்கை கொடுத்தது. அது எந்த அளவுக்கு என்றால் சர்வதேச டெஸ்ட் போட்டியில் நேரடியாக களம் காணும் அளவுக்கு கிடைத்த நம்பிக்கை. நாக்பூர் விக்கெட்டில் பவுன்ஸ் அறவே இல்லை. ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் லைனில்தான் பந்து வீசி இருந்தேன்.
இதற்காக நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை பந்து வீசி பயிற்சி செய்தேன். அது எனக்கு கை கொடுத்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட ஸ்பெல் வீச வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன். அதனால் அதை செய்தேன்” என ஜடேஜா தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட்டின் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 177 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருந்தனர். இதைத் தொடர்ந்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களுடன் களத்தில் உள்ளார். கே.எல்.ராகுல் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார். பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் முதல் நாளன்று தனது ஆதிக்கத்தை செலுத்தி உள்ளது இந்திய அணி.
That when @imjadeja let one through Steve Smith's defence!
Follow the match https://t.co/SwTGoyHfZx #TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/Lj5j7pHZi3
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT