Published : 09 Feb 2023 06:25 AM
Last Updated : 09 Feb 2023 06:25 AM
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது அதிரடி பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவராக இருந்து வந்தார். கடந்த மாதம் அவர், கார் விபத்தில் சிக்கியதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கலந்துகொள்ளவில்லை. அவரது இடத்தை பிடிக்க கே.எஸ்.பரத், இஷான் கிஷன் இடையே போட்டி நிலவுகிறது.
விக்கெட் கீப்பர் பணியில் கே.எஸ்.பரத் திறமையாக செயல்படக்கூடியவர். பேட்டிங்கில் அவர், ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் முச்சதம் அடித்துள்ள போதிலும் உயர்தர பந்து வீச்சுக்கு எதிராக அவரது மட்டை வீச்சு எந்த அளவுக்கு எடுபடும் என்பது தெரியவில்லை.
ஏனெனில் சமீபத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹிருத்திக் ஷோக்கீன் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் பரத் கடும் சிரமப்பட்டார். இதனால் நேதன் லயன் போன்ற தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கே.எஸ்.பரத் எவ்வாறு செயல்படுவார் என்ற கேள்விகள் எழுகின்றன.
இஷான் கிஷனை எடுத்துக்கொண்டால் அவருக்கு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொண்ட அதிக அனுபவம் இல்லை. முதல் நாளிலேயே ஆடுகளத்தில் பந்துகள் அதிகம் திரும்ப தொடங்கி விட்டால் விக்கெட் கீப்பரின் பணி முக்கியத்துவம் பெறும் என்பதால் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு இந்திய அணி நிர்வாகம் அதிகம் யோசிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT