Published : 09 Feb 2023 06:19 AM
Last Updated : 09 Feb 2023 06:19 AM

நாக்பூர் மைதானத்தில் முதல் டெஸ்டில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்குகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர்-கவாஸ்கர்டிராபிக்கான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் நாக்பூரில் உள்ளவிதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாக உள்ளது.

ஏனெனில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டுமானால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி கணிசமான அளவில் வெற்றிகளை குவிக்க வேண்டும். அதேவேளையில் உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியா 19 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது.

மேலும் 2018-19 மற்றும் 2020-21-ம் ஆண்டு பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி தோற்கடித்து இருந்தது. தொடர்ச்சியான இந்த இரு தோல்விகளுக்கு இம்முறை பதிலடி கொடுப்பதிலும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டக்கூடும். ஆஸ்திரேலிய அணி இம்முறை தனது பயிற்சி முறைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்திருந்தது.

வழக்கமான 3 நாள் பயிற்சி ஆட்டத்தை தவிர்த்து விட்டு பெங்களூருவில் உள்ள மைதானத்தில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டது. முக்கியமாக சுழற்பந்து வீச்சுக்குஎதிராக அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு நாளும் நீண்டநேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அஸ்வின் பாணியில் பந்துவீசக்கூடிய பரோடாவைச் சேர்ந்த மகேஷ் பித்தியாவை அதிக நேரம் பயிற்சிக்கு பயன்படுத்தினர் ஆஸ்திரேலிய வீரர்கள். இதற்கு காரணம் டெஸ்ட் தொடரில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்படக்கூடும் என்பதுதான்.

ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோர் காயத்தில் இருந்து குணமடையாததால் முதல் டெஸ்டில் களமிறங்கமாட்டார்கள் என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். பேட்டிங்கில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மார்னஸ் லபுஷேன் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடியவர்கள்.

பந்து வீச்சில் பாட் கம்மின்ஸூடன் ஸ்காட் போலண்ட் தொடக்க ஓவர்களை வீசக்கூடும். மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக லான்ஸ் மோரிஸ் இடம் பெறக்கூடும். சுழற்பந்து வீச்சாளர்களில் நேதன் லயனுடன் இணைந்து அஷ்டன் அகரும் இந்திய பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

இந்திய அணியை பொறுத்தவரையில் இந்தத் தொடர் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு சவாலாக அமையக்கூடும். ஏனெனில் பெரிய அணிகளுக்கு எதிராக தொடர்களில் பலமுறை காயம் காரணமாக அவர் பங்கேற்றது இல்லை. இருப்பினும் விராட் கோலியை போன்று இந்திய அணியை ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதில் ரோஹித் சர்மா முனைப்பு காட்டுவார் என கருதப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க இன்றைய ஆட்டத்துக்கான அணித்தேர்வு மிகவும் கடினமானதாக மாறியுள்ளது. அநேகமாக இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்கள், இரு வேகப்பந்து வீச்சாளர்கள், 5 பிரதான பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பாணியில் களமிறங்கக்கூடும். இந்த வகையில் சுழற்பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் மொகமது ஷமியுடன் உமேஷ் யாதவ் அல்லது மொகமது சிராஜ் களமிறங்குவார்.

பேட்டிங் வரிசையை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி ஆகியோரது இடங்கள் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டதுதான். 5-வது வீரராக ஷுப்மன் கில் அல்லது சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படக்கூடும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எஸ்.பரத் அல்லது இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். டெஸ்ட் போட்டி என்பதால் கே.எஸ்.பரத் களமிறங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

நேரம்: காலை 9.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஆடுகளம் எப்படி?: விதர்பா கிரிக்கெட் சங்க மைதான ஆடுகளத்தில் சில பகுதிகளை தேர்ந்தெடுத்து நீர் தெளித்து வருகின்றனர் மைதான ஊழியர்கள். ஆடுகளத்தின் நடுப்பகுதி மற்றும் வலது கை பேட்ஸ்மேன்களுக்கான ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே உள்ள பகுதிகளில் நீர் தெளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இடது கை பேட்ஸ்மேன்களுக்கான சிறந்த லென்ந்த், ஆஃப் ஸ்டெம்ப் பகுதிக்கு வெளியே வறண்ட நிலை உள்ளது. மேலும் சில பகுதிகளை தேர்ந்தெடுத்து புற்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இது ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருக்கக்கூடும்.

ரிவர்ஸ் ஸ்விங்..: நாக்பூர் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. எனினும் ஆடுகளத்தின் இரு பகுதிகளிலும் வறண்ட நிலையே காணப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பந்து மென்மையாக மாறும் போது வேகப் பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங்கில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.

மிரட்டுவாரா நேதன் லயன்?: ஆஸ்திரேலிய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் எவ்வாறு அச்சுறுத்தலாக திகழ்கிறாரோ அதேபோன்று இந்திய அணிக்கு நேதன் லயன் கடும் சவால் அளிக்கக்கூடியவராக உள்ளார். இந்திய மண்ணில் அவர், 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். 2012-13-ம் ஆண்டு தொடரில் ஓவருக்கு சராசரியாக 4.40 ரன்கள் வழங்கிய நேதன் லயன் அதன் பின்னர் 2016-17-ம் ஆண்டு தொடரில் சிக்கனமாக 2.80 ரன்களே வழங்கினார். இந்திய மண்ணில் சேதேஷ்வர் புஜாராவை 5 முறையும், விராட் கோலியை 4 முறையும் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x