Published : 08 Feb 2023 10:04 PM
Last Updated : 08 Feb 2023 10:04 PM

WT20 WC 2023 | பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை துவம்சம் செய்த இந்தியா: 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ரிச்சா கோஷ் | கோப்புப்படம்

ஸ்டெல்லன்போஷ்: மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியில் ரிச்சா கோஷ், 91 ரன்களை குவித்திருந்தார்.

தென் ஆப்பிரிக்க நாட்டில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. வரும் 10-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் இந்த தொடர் அங்கு நடைபெறுகிறது. இந்தியா உட்பட மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்கின்றன. குரூப் மற்றும் நாக்-அவுட் என 23 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த தொடரில் இந்திய அணி குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளும் இடம் பெற்றுள்ளன. வரும் 12-ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுகிறது. இந்நிலையில், தொடரின் வார்ம்-அப் போட்டியில் வங்கதேச அணியுடன் இந்தியா பலப்பரீட்சை செய்தது. ஆஸ்திரேலிய அணியுடனான முதல் வார்ம்-அப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவி இருந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரிச்சா கோஷ், 56 பந்துகளில் 91 ரன்களை குவித்தார். 3 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், 27 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 183 ரன்கள் குவித்தது.

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. சரியான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் தடுமாறியது அந்த அணி. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே வங்கதேசம் எடுத்திருந்தது. இதன் மூலம் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் தேவிகா வைத்யா, 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ராஜேஸ்வரி கெய்க்வாட், அஞ்சலி சர்வானி, தீப்தி சர்மா, ராதா யாதவ், ஷபாலி வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். வங்கதேச வீராங்கனை நஹிதா அக்தர் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x