Published : 07 Feb 2023 06:03 AM
Last Updated : 07 Feb 2023 06:03 AM

அஸ்வினை சமாளிப்பது சவால் - சொல்கிறார் ஆஸி. பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா

பெங்களூரு: அஸ்வினை உள்ளடக்கிய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிப்பது கடினமான சவால் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம், குறிப்பாக இந்திய மண்ணில் நாங்கள் பெறக்கூடிய ஆடுகளங்களின் வகைகளில் எப்படி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவது என்பது குறித்து சிந்திக்கிறோம். முன்பை விட நாங்கள்சிறந்த இடத்தில் இருப்பது போல்உணர்கிறோம்.

அஸ்வின் துப்பாக்கி போன்று செயல்படக் கூடியவர். அவர், மிகவும்திறமையானவர். தந்திரமாக வீசும் அவர், பந்து வீச்சில் அதிக மாறுபாடுகளை கொண்டுள்ளார். கிரீஸையும் நன்கு பயன்படுத்துகிறார்.

இந்த தொடர் சிறந்த சவால்களில் ஒன்றாக இருக்கும். முதல் நாளிலோ, 2-வது நாளிலோ, 3-வது நாளிலோ அல்லது ஏதோ ஒரு கட்டத்தில் ஆடுகளங்கள் சுழலுக்கு மாறும். அப்போது அஸ்வின் ஆட்டத்துக்குள் இருப்பார். அதிக ஓவர்களை வீசுவார்.

எனவே, நான் அவருக்கு எதிராகஎப்படி விளையாடப் போகிறேன், எப்படி ரன்களை அடிக்கப் போகிறேன் என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது. அஸ்வின் என்ன செய்வார் என்பதையும் கண்டறிய வேண்டும். நீங்கள் அவருக்கு எதிராக நீண்ட நேரம் பேட்டிங் செய்தால்,அவர் உங்களுக்கு எதிராக தனது விளையாட்டுத் திட்டங்களை மாற்றிவிடுவார்.

ஒரே மாதிரியான பந்துகளை அவர் அனைத்து ஓவர்களிலும் வீசவே மாட்டார். புதுப்புது விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் அவர் நிச்சயம் உங்களுக்கு எதிராகதனது அனைத்து திறன்களையும் பயன்படுத்துவார். ஆடுகளம் சிறப்பானதாக இருந்தால் புதிய பந்தில் பேட் செய்வது எளிதானதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் ஆடுகளங்கள் மோசமடைந்து, புதிய பந்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசினால், பேட் செய்வது கடினமானதாகி விடும்.

நாங்கள் பயிற்சியின் போது,பந்துகள் சுழலும் ஆடுகளத்தில் புதியபந்தில் பேட் செய்வது கடினமானவே இருந்தது. துணைக்கண்டத்தில் முதலில் பேட்டிங்கைத் தொடங்குவதே நல்லது என ரசிகர்கள் கருதுகின்றனர். இது ஆடுகளம் தட்டையாக இருக்கும் போது சரியாக இருக்கும். பந்துகள் சுழலும் போதுசிறந்த முடிவாக இருக்காது.ஏனெனில் புதிய பந்தில் அதிகமாறுபாடுகள் இருக்கும். அதுவேபந்து மென்மையாகிவிட்டால், கணிப்பது எளிதாக இருக்கும். இவ்வாறு உஸ்மான் கவாஜா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x