Published : 04 Feb 2023 05:39 AM
Last Updated : 04 Feb 2023 05:39 AM
பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழற்பந்து வீச்சுகடும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்பதால் அதை சமாளிப்பதற்காக அஸ்வினை போன்று பந்துவீசக் கூடியவரை வலைபயிற்சியில் பயன்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர் வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இதற்காக பெங்களூருவில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
2004-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாத ஆஸ்திரேலியாவுக்கு இம்முறையும் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என கருதப்படுகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சுழற்பந்து வீச்சு பிரதான பங்கு வகிக்கக்கூடும் என கருதியுள்ள ஆஸ்திரேலிய அணி அதற்கு தகுந்தவாறு தனது பயிற்சி முறைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்துள்ளது.
ஆலூரில் உள்ள கேஎஸ்சிஏ மைதானத்தில் சுழலுக்கு சாதகமானது போன்ற ஆடுகளத்தை தயார் செய்து, அங்கு அஸ்வினை போன்று வீசக்கூடிய 21 வயதான சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் பித்தியா என்பவரை வலைப்பயிற்சியில் வீச செய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள்.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில், “இந்திய சுற்றுப்பயணத்தின் முதல் பயிற்சி அமர்வில் மிகவும் கவனிக்கத்தக்கது, ரவிச்சந்திரன் அஸ்வினின் ‘நகல் ‘இருப்பதுதான். சுழலை எதிர்கொள்வதில் முக்கிய கவனம் செலுத்தியதால் உள்ளூர் வலைப்பயிற்சி பந்து வீச்சாளர்களில் மகேஷ் பித்தியா தனித்து விளங்கினார். ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களை மகேஷ் பித்தியாவின் பந்து வீச்சு தொந்தரவு செய்தது. இதனால் கிட்டத்தட்ட இடைவேளையின்றி அவர், பந்து வீசினார்” என தெரிவித்துள்ளது.
பித்தியா தனது 11 வயது வரை அஸ்வினின் பந்து வீச்சை பார்த்தது இல்லை. 2013-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியின் போதுதான் அஸ்வினின் பந்து வீச்சை பார்த்துள்ளார் பித்தியா. இதன் பின்னர் அவரது பந்து வீச்சை அதிகம் நேசிக்கத் தொடங்கி உள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் தர கிரிக்கெட் போட்டியில் பரோடா அணிக்காக பித்தியா அறிமுகமாகி உள்ளார். அப்போது அவரது பந்து வீச்சு ரவிச்சந்திரன் அஸ்வின் போன்று இருப்பதாக கூறி சமூக வலைதளத்தில் வீடியோ வலம் வந்துள்ளது. இதை அறிந்த ஆஸ்திரேலிய அணிக்கான த்ரோ டவுன் பந்து வீச்சாளர்களில் ஒருவரான பிரிதேஷ் ஜோஷி, உதவி பயிற்சியாளர் ஆண்ட்ரே போரோவெக்கின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளார். இதன் அடிப்படையிலேயே பித்தியா வலைபயிற்சியில் பந்து வீசுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT