Published : 04 Feb 2023 05:23 AM
Last Updated : 04 Feb 2023 05:23 AM
புதுடெல்லி: சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வெளியிட்டுள்ள உலக தரவரிசை பட்டியலில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இந்திய குத்துச்சண்டை வீரர்களின் உயர்மட்ட செயல் திறன்களால் 36,300 ரேங்கிங் புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. கஜகஸ்தான் 48,100 புள்ளிகளுடன் முதலிடத்திலும், உஸ்பெகிஸ்தான் 37,600 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
பலம் வாய்ந்த வீரர்களை கொண்ட அமெரிக்கா, கியூபா போன்ற நாடுகளை பின்னுக்குத்தள்ளி தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. குத்துச்சண்டையில் அதிகார மையமாக திகழும் அமெரிக்கா 4-வது இடத்தையும், கியூபா 9-வது இடத்தையும் பிடித்துள்ளன.
உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போன்ற உலகளாவிய போட்டிகளில் முதல் 5 இடங்களுக்குள் தொடர்ந்து இடம்பிடித்ததன் வாயிலாக இந்திய குத்துச்சண்டை சமீபத்திய ஆண்டுகளில் முன்னோடியில்லாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு காமன்வெல்த் விளையாட்டில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் 16 பதக்கங்களை வென்றுள்ளனர். மேலும் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் 2008 முதல் சர்வதேச போட்டிகளில் 140 பதக்கங்களை கைப்பற்றி உள்ளனர்.
2016-ம் ஆண்டு முதல் இந்தியகுத்துச்சண்டை வீரர்கள், வீராங்கனைகள் 16 எலைட் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ளனர். வரும்மார்ச் 15 முதல் 26-ம் தேதி வரை பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை இந்திய குத்துச்சண்டை சங்கம் நடத்த உள்ளது. இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறஉள்ளது இது 3-வது முறையாகும்.
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் அஜய் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டிருப்பது பெரிய சாதனைமிக்க தருணம். சில ஆண்டுகளுக்கு முன்பு 44 -வது இடத்தில் இருந்தோம். தற்போது அங்கிருந்து மூன்றாவது இடத்திற்கு, இந்திய குத்துச்சண்டை ஒரு மாபெரும் பாய்ச்சலை எடுத்துள்ளது.
இந்திய குத்துச்சண்டை சம்மேளனம், இந்தியாவை குத்துச்சண்டை அதிகார மையமாக மாற்றும் நோக்கத்தை நிறைவேற்ற கடுமையாக உழைத்து வருகிறது. குத்துச்சண்டையில் இந்தியாவின் விரைவான வளர்ச்சியை இந்த தரவரிசை சுட்டிக்காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT