Published : 03 Feb 2023 10:01 PM
Last Updated : 03 Feb 2023 10:01 PM

உலகக் கோப்பை 2026-ல் விளையாடுவது மிகவும் கடினம்: மனம் திறந்த மெஸ்ஸி

மெஸ்ஸி | கோப்புப்படம்

பியூனஸ் அயர்ஸ்: எதிர்வரும் கால்பந்து உலகக் கோப்பை 2026 தொடரில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி. இதனை அர்ஜென்டினா நாட்டின் நாளேடு ஒன்றுக்கு பேட்டி கொடுத்தபோது அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்கள் அணிதான் வெற்றி பெற வேண்டும் என விரும்புவார்கள். அதுவும் உலகக் கோப்பை மாதிரியான தொடர் என்றால் சொல்லவே வேண்டாம். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொரு வீரரின் இதயத்துடிப்பு போலவே இருக்கும். அதுவும் அதில் மெஸ்ஸி விளையாடினால் அவரோடு சேர்த்து அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களின் துடிப்பும் அதில் இருக்கும்.

கடந்த டிசம்பரில் உலகக் கோப்பை கனவை அதே துடிப்போடு நிஜமாக்கினார் மெஸ்ஸி. அர்ஜென்டினா அணியை திறம்பட வழிநடத்தி, தொடரில் தன் சார்பாக 7 கோல்களை பதிவு செய்து கோப்பையை வென்று காட்டினார். இறுதிப் போட்டிக்கு பிறகு ஓய்வு முடிவையும் மாற்றிக் கொண்டார்.

“எனது வயது காரணமாக 2026 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது மிகவும் கடினம்தான். அதற்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளது. எனக்கு கால்பந்து விளையாடுவது மிகவும் பிடிக்கும். நான் நல்ல உடற்திறனோடும், அதே ரசனையோடும் இருந்தால் நிச்சயம் அதை தொடருவேன். ஆனால், அது எனது கெரியரின் போக்கை பொறுத்தே அமையும்” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளரும் அடுத்த உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி விளையாடுவார் என தான் நம்புவதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார். அவரது வாய்ப்புக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x