Published : 03 Feb 2023 06:07 PM
Last Updated : 03 Feb 2023 06:07 PM

IND vs AUS டெஸ்ட் தொடர் | அஸ்வினின் ‘டூப்’பை வைத்து பயிற்சி மேற்கொள்ளும் ஆஸி.!

அஸ்வின் | கோப்புப்படம்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் அச்சு பிசகாமல் அஸ்வினைப் போலவே பந்து வீசும் அவரது டூப்பை தங்களது நெட் பவுலராக கொண்டு தீவிர பயிற்சி செய்து வருகின்றனர் ஆஸ்திரேலிய அணி வீரர்கள். இந்தத் தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் பகிர்ந்துள்ளது.

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது முகாமிட்டுள்ளது. வரும் 9-ம் தேதி முதல் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் அந்த அணி விளையாட உள்ளது.

சுழல் சாதகம்: டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சு பிரதான பங்கு வகிக்கும். ஏனெனில், இந்திய ஆடுகளங்கள் சுழலுக்கு அதிகம் ஒத்துழைப்பு கொடுக்கும். அதைக் கருத்தில் கொண்டே ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர். இருந்தாலும் இந்திய அணியின் சுழல் சூறாவளிகளை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சமாளித்து ஆட வேண்டும்.

இதில், அஸ்வின் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் அச்சுறுத்தல் கொடுப்பார். கடந்த முறை இந்திய அணி, ஆஸ்திரேலியா பயணித்தபோது அந்த நாட்டு மண்ணில் அந்த நாட்டு வீரர்களுக்கு தனது பந்துவீச்சால் இம்சை கொடுத்தவர் அஸ்வின். இதையெல்லாம் கருதி அவரைப் போலவே பந்து வீசும் பந்துவீச்சாளர் ஒருவரை நெட் பவுலராக தேடிப் பிடித்து, அவரை பந்து வீசச் சொல்லி தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.

யார் இந்த அஸ்வினின் டூப்? - ஆஸ்திரேலிய அணியின் முதல் பயிற்சி செஷனில் அஸ்வினின் டூப் பந்து வீசி வருவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்த தொடரில் சுழற்பந்து வீச்சு பிரதானமாக பங்களிக்க உள்ளது. அதனால் இந்தியாவில் உள்ளூர் அளவில் கிடைக்கும் சிறந்த நெட் பவுலர்களை வைத்து பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அதில் அஸ்வினின் டூப்தான் டாப் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் பகுதியை சார்ந்த மஹீஷ் பித்தியா எனும் 21 வயது இளம் பவுலர்தான் அஸ்வினின் டூப் என அறியப்படுகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் அவரது 11 வயது வரை அஸ்வின் பந்து வீசியதை அவர் டிவியில் கூட பார்த்தது கிடையாதாம். (அவர் வீட்டில் அப்போது டிவி இல்லை) கடந்த 2013-ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வினை, பித்தியா பார்த்துள்ளார். அப்போது முதல் அஸ்வின்தான் அவரது ஹீரோ. பித்தியா, அஸ்வினை போலவே பந்து வீச பழகி. இப்போது கிட்டத்தட்ட அஸ்வினாகாவே உருமாறி நிற்கிறார். கடந்த டிசம்பரில்தான் பரோடா அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி உள்ளார்.

அவர் குறித்த தகவலை ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் குழுவிடம் பிரதேஷ் ஜோஷி சொல்லியுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் பந்து வீச்சை பார்த்ததும் ஆஸ்திரேலிய அணி உடனடியாக அவரை அழைத்துள்ளது. அவரும் தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் அசராமல் வெரைட்டியாக பந்து வீசி வருவதாக தகவல். குறிப்பாக லபுஷேன், ஸ்மித், ஹெட் போன்ற வீரர்கள் அவரது பந்துவீச்சை எதிர்கொண்ட போது தடுமாறியதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் இந்த பயிற்சி எதிர்வரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க உதவும் எனத் தகவல். கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான ஆளூர் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா பயிற்சி செய்து வருகிறது.

— cricket.com.au (@cricketcomau) February 3, 2023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x