Published : 03 Feb 2023 03:29 PM
Last Updated : 03 Feb 2023 03:29 PM

போச்சுரா! இது வேறயா?- தென் ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை தகுதியில் எழுந்த புதிய சிக்கல்

தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் | கோப்புப்படம்

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கிரிக்கெட் உலகில் முன்னணி அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்கா நேரடியாக தகுதி பெறுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா பணமழை லீகுக்காகவும், அதில் முதலீடு செய்த இந்திய தொழிலதிபர்களின் நலன்களுக்காகவும், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் நன்மைக்காகவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை ரத்து செய்ததிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பித்தது இந்தத் தலைவலி.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றினாலும் கடைசி போட்டியில் தோல்வியை தழுவியது உலகக் கோப்பை தகுதிக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது. இது போதாதென்று ஓவர்களை குறித்த நேரத்தில் வீசாததால் உலகக்கோப்பை சூப்பர் லீக் பாயிண்ட்களில் ஒரு புள்ளியையும் இழக்க நேரிட்டது. குறித்த நேரத்தில் பந்து வீச வேண்டிய கட்டாய ஓவர்களில் ஒரு ஓவர் குறைவாக வீசினர். இதையடுத்து முன்னர் 79 புள்ளிகளுடன் 9-ம் இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா ஒரு புள்ளியை இழந்து தற்போது 78 புள்ளிகளுடன் உள்ளது. ஒரு புள்ளிதானே இதில் என்ன சிக்கல் என்று கேட்கலாம், ஆனால் அதுதான் விஷயம்.

உலகக் கோப்பை புதிய தகுதி விதிகளின் படி சூப்பர் லீக் புள்ளிகளின் அடிப்படையில் டாப் 8 அணிகள் இயல்பாகவே தகுதி பெறும். மீதமுள்ள 2 இடங்களுக்கு ஐசிசி சூப்பர் லீகில் உள்ள 5 அணிகள், அசோசியேட் அணிகள் ஐந்துடன் தகுதிச் சுற்றில் மோத வேண்டும். இப்போதைக்கு இந்தியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 7 அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. 8-வது நிலையில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது. இது 88 புள்ளிகள் பெற்றுள்ளது, தென் ஆப்பிரிக்கா 78 புள்ளிகள், இலங்கை 77 புள்ளிகள், அயர்லாந்து 68 புள்ளிகள்.

நெதர்லாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 2 போட்டிகளில் வென்றால் அதன் புள்ளிகள் 98 என்று உயரும். இலங்கை - நியூஸிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடரில் 3 போட்டிகளிலும் இலங்கை வென்றால் தென் ஆப்பிரிக்காவைக் கடந்து செல்லும். ஆனால், அதற்கான வாய்ப்புக் குறைவு. ஏனெனில் நியூஸிலாந்துக்கு சென்று இலங்கை ஆடுவதால் அங்கு நியூஸிலாந்தின் வெற்றி விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் ஹோம் சாதக அம்சத்தினால் 17-4 என்று உள்ளது.

அயர்லாந்து அணி வங்கதேசத்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும் வென்றுவிட்டால் தென் ஆப்பிரிக்காவின் 98 புள்ளிகளை எட்டிப் பிடிக்கும். அப்போது நெட் ரன் ரேட் பரிசீலிக்கப்படும். மாறாக நெதர்லாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 1-1 என்று ட்ரா செய்தால் தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸுடன் 88 புள்ளிகளில் இணையும். இப்போது இலங்கை ஒரு வெற்றி பெற்று, 2 போட்டிகள் ஆட முடியாமல் நோ-ரிசல்ட் என்று ஆனால் இலங்கை உள்ளே வந்து விடும். இப்போதைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து தொடர்களிலும் ஆடி முடித்து விட்டதால் அந்த அணிதான் மீண்டும் தகுதி சுற்றில் ஆடி தகுதி பெற வேண்டும் என்று தெரிகிறது. ஆனால், தென் ஆப்பிரிக்காவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. இந்த ஒரு புள்ளியை ஸ்லோ ஓவர் ரேட்டில் இழந்தது அந்த அணிக்கு நிச்சயம் பின்னடைவுதான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x