Published : 02 Feb 2023 07:00 PM
Last Updated : 02 Feb 2023 07:00 PM
சிட்னி: எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா நியாயமான முறையில் ஆடுகளங்களை அமைத்தால் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் இயன் ஹீலி தெரிவித்துள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது முகாமிட்டுள்ளது. இங்கு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி விளையாட உள்ளது. இந்நிலையில், இயன் ஹீலி இப்படிச் சொல்லியுள்ளார்.
“வழக்கமாக இந்திய ஆடுகளங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்கத்தில் பேட்டிங் செய்ய உதவும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சுழலுக்கு சாதகமாக விக்கெட் மாறும். அது போன்ற ஆடுகளம் நியாயமான முறையில் அமைக்கப்பட்டால் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும்.
மேலும், கடந்த தொடரை வைத்து பார்க்கும் போது ஸ்டார்க் மற்றும் நாதன் லியோனை எண்ணி எனக்கு கொஞ்சம் கவலையாக உள்ளது. ஏனெனில் அங்கு ஆடுகளம் கணிக்கமுடியாத அளவுக்கு பந்துகளை கொண்டு செல்கிறது. இது மாதிரியான சூழலை இந்தியா திறம்பட கையாளும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இந்த தொடரில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்று விளையாடும் வாய்ப்பை பெற முடியும். ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அது தவிர இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை ஆஸ்திரேலியா வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் 2004-க்கு பிறகு இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய போதும் ஆடுகளம் குறித்த சர்ச்சைகள் எழுந்தன. அப்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் ‘இது நியாயம் அல்ல’ என சொல்லி இருந்தனர். அவர்கள் தொடரில் சில போட்டிகள் முடிந்த பிறகுதான் அப்படி சொல்லி இருந்தார்கள். ஆனால், இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஹீலி இப்படி சொல்லியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...