Published : 02 Feb 2023 06:38 AM
Last Updated : 02 Feb 2023 06:38 AM
சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி – ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன.
15 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னையின் எப்சி 4 வெற்றி, 5 டிரா, 6 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் எஞ்சியுள்ள 5 ஆட்டங்களிலும் கணிசமான வெற்றிகளை பெற வேண்டும் என்ற நெருக்கடியில் சென்னையின் எப்சி அணி உள்ளது.
காயத்தில் இருந்து குணமடைந்துள்ள நெதர்லாந்தை சேர்ந்த நாசர் எல் கயாதி இன்றைய ஆட்டத்தில் களமிறங்க உள்ளார். நடுகள வீரரான அவர், இந்த சீசனில் 8 ஆட்டங்களில் 7 கோல்கள் அடித்துள்ளார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை எப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ்பிரடாரிக் கூறும்போது, “ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அபாயகரமான ஆட்டம் எனக்குபிடிக்கும். கால்பந்து விளையாட்டில் தாக்குதல் ஆட்டம் எப்போதுமே அபாயகரமானதுதான். எல்கயாதிமுழு உடற்தகுதியை அடைந்துவிட்டார். ஒடிசா அணிக்கு எதிரானஆட்டத்தில் அவர், முக்கிய பங்காற்றக்கூடும். கடந்த போட்டியில் ஏடிகே மோகன் பகான் அணி ஒடிசாஅணிக்கு அழுத்தம் கொடுத்தது. அவர்கள் ஒடிசா அணி வாய்ப்புகளை உருவாக்க அனுமதிக்கவில்லை. இதே அணுகுமுறையை நாங்களும் கடைபிடிப்போம்” என்றார்.
ஒடிசா அணியானது தொடர்ச்சியாக இரு தோல்விகளை சந்தித்த நிலையில் சென்னையின் எப்சி அணியை எதிர்கொள்கிறது. 15 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 7 வெற்றி, ஒரு டிரா, 7 தோல்விகளுடன் 22 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடம் வகிக்கிறது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி – ஒடிசா எப்சி அணிகள் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னையின் எப்சி 2 ஆட்டத்திலும், ஒடிசா எப்சி 2 ஆட்டத்திலும் வெற்றி கண்டது. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment