Published : 02 Feb 2023 06:48 AM
Last Updated : 02 Feb 2023 06:48 AM
புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டி, பாரீஸ் ஒலிம்பிக் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 2023-24-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,397.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.723.97 கோடி அதிகமாகும்.
2022-23-ம் நிதியாண்டில் முதலில் அறிவிக்கப்பட்ட ரூ.3,062.60 கோடி நிதி பின்னர் ரூ.2,673.35 கோடியாக குறைக்கப்பட்டது. சீனாவில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசியத் திட்டமான ‘கேலோ இந்தியா’ இம்முறையும் மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டமாக தொடர்கிறது. இந்த திட்டத்திற்கு கடந்த நிதியாண்டில் ரூ. 606 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,045 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இது ரூ.439 கோடி அதிகமாகும். உலகளாவிய விளையாட்டு போட்டிகளான ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க சிறந்த வீரர்களை உருவாக்குவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விளையாட்டு வீரர்களுக்கான தேசிய முகாம்களை நடத்துதல், விளையாட்டு வீரர்களுக்கு உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை வழங்குதல், பயிற்சியாளர்கள் நியமனம் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பை பராமரித்தல் போன்றவற்றை கவனித்து வரும் இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு, பட்ஜெட் ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கீடு ரூ.36.09 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு திருத்தப்பட்ட செலவு ரூ.749.43 கோடியாக இருந்த நிலையில் தற்போது 2023-24 ம் ஆண்டிற்கான அவர்களின் நிதி ஒதுக்கீடு ரூ. 785.52 கோடியாக உள்ளது.
இதேபோன்று தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரூ.325 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.45 கோடி அதிகமாகும்.
உலக ஊக்கமருந்து தடுப்புஅமைப்பு (வாடா) அங்கீகாரத்துடன் செயல்படும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (நாடா) மற்றும் தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகம் ஆகியவை இதற்கு முன்பு இந்திய விளையாட்டு ஆணையத்திடம் இருந்து நிதியுதவி பெற்றன. இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் நாடாவுக்கு ரூ.21.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சோதனைகளை நடத்தும் தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகம் ரூ.19.50 கோடியை பெறும். இதேபோன்று தேசிய விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT