IND vs NZ 3-வது டி20 | ஹர்திக் பாண்டியாவின் அசத்தல் பவுலிங் - நியூசிலாந்துக்கு எதிராக தொடரை கைப்பற்றியது இந்திய அணி

IND vs NZ 3-வது டி20 | ஹர்திக் பாண்டியாவின் அசத்தல் பவுலிங் - நியூசிலாந்துக்கு எதிராக தொடரை கைப்பற்றியது இந்திய அணி
Updated on
2 min read

அகமதாபாத்: ஹர்திக் பாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு காரணமாக இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.

235 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை. முதல் நான்கு வீரர்களில் மூன்று வீரர்கள் ஒற்றை இலக்க ரணிலும், மார்க் சாப்மேன் பூஜ்ஜியத்திலும் அவுட் ஆகி அதிர்ச்சி ஏற்படுத்தினர். ஐபிஎல் தொடரில் அகமதாபாத் பிட்சை ஹோம் பிட்ச்சாக கொண்டுள்ள ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியில் முதல் ஓவரே பந்துவீசினார்.

இவரே, நியூசிலாந்து அணியின் சரிவுக்கும் வித்திட்டார். முதல் ஓவரே பின் ஆலனை வெளியேற்றிய அவர், தனது அடுத்த ஓவரில் கிளென் பிலிப்ஸ் அவுட் ஆக்கி அசத்தினார். அவரைத் அர்ஷதீப் சிங், உம்ரான் மாலிக் மற்றும் ஷிவம் மாவியும் தங்கள் பங்கிற்கு தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார். இதனால் நியூசிலாந்து அணி 10 ஓவர்களுக்கு முன்பாகவே எட்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. டேரில் மிட்செல் மட்டும் ஆறுதலாக அந்த அணியில் நிலைத்து ஆடி 35 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 12.1 ஓவரில் 66 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.

168 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்ற இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இந்திய அணியின் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக கில் மற்றும் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். கிஷன், 1 ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த திரிபாதி உடன் 80 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கில். ராகுல் திரிபாதி, 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் 103 ரன்களுக்கு கில் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 54 பந்துகளில் சதம் விளாசி இருந்தார் கில். மறுமுனையில் பாண்டியா, 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்த கில், 63 பந்துகளில் 126 ரன்களை எடுத்திருந்தார். 12 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை அவர் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. தற்போது 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து விரட்டி வருகிறது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in