Published : 01 Feb 2023 05:33 PM
Last Updated : 01 Feb 2023 05:33 PM
கொல்கத்தா: இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் பரிமல் டே காலமானார். 81 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1941, மே 4-ம் தேதி பிறந்தவர் அவர். இந்திய அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 1966-ல் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற மெர்டெக்கா கோப்பை தொடரில் கொரியாவுக்கு எதிரான வெண்கலப் பதக்கத்திற்கான பிளே-ஆஃப் போட்டியில் அபாரமாக விளையாடி இந்திய அணி மூன்றாவது இடம் பிடிக்க உதவினார்.
கிளப் அளவிலான போட்டியில் ‘ஈஸ்ட் பெங்கால்’ அணிக்காக 84 கோல்களை பதிவு செய்துள்ளார். லீக் அளவிலான போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 1962 மற்றும் 1968 என அவர் தலைமையிலான வங்காள அணி இரண்டு முறை சந்தோஷ் கோப்பையை வென்றுள்ளது. 1971-ல் மோகன் பேகன் அணியில் இணைந்து ரோவர்ஸ் கோப்பையை வென்றிருந்தார்.
“பரிமல் டேயின் மறைவு இந்திய கால்பந்தாட்டத்திற்கு மாபெரும் இழப்பாகும். ஜங்லா-டே என நம் எல்லோராலும் அவர் அறியப்படுகிறார். 1960களில் நாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவர். இன்றும் ரசிகர்களின் இதயங்களிலும், மனதிலும் அவர் குடி கொண்டுள்ளார்” என அகில இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் கல்யாண் சவுபே இரங்கல் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT