Published : 31 Jan 2023 12:31 PM
Last Updated : 31 Jan 2023 12:31 PM

‘உலகக் கோப்பை அணிக்கு செஹல் தேவையில்லை... குல்தீப் யாதவ்தான் தேவை!’ 

குல்தீப் யாதவ் | கோப்புப் படம்.

இந்தியாவின் முன்னாள் இடது கை ஸ்பின்னரும், முன்னாள் தலைமைத் தேர்வாளருமாக பணியாற்றிய கர்நாடகாவைச் சேர்ந்த சுனில் ஜோஷி 2023 உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதையொட்டி இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும், யஜுவேந்திர செஹல் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிராக அங்கு டெஸ்ட் ஆடிய குல்தீப் யாதவ் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளையும் 40 ரன்களையும் எடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். ஆனால், புரியாத புதிராக அடுத்த போட்டியில் உட்கார வைக்கப்பட்டார். மீண்டும் இலங்கை, நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கு நடந்த இரண்டு ஒருநாள் தொடர்களிலும் அட்டகாசமாக வீசி அசத்தினார்.

இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ் தன் பழைய ஒத்திசைவைக் கண்டுப்பிடித்துக் கொள்ள இவருடன் வீசிய செஹல் தன் ஒத்திசைவை இழந்து விட்டார். லைன் மற்றும் லெந்த், தன்னம்பிக்கை என்று எதுவும் இல்லாமல் வீசி வருகிறார்.

இந்நிலையில் முன்னாள் செலக்டர் சுனில் ஜோஷி, இந்த இருவரையும் நெருக்கமாக அவதானித்தவர்களில் ஒருவர் என்ற வகையில் ஏன் குல்தீப் யாதவ் தேவை, செஹல் தேவையில்லை என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்:

இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ்வை ட்ராப் செய்த பிறகு உத்தரப்பிரதேச அணியில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிராக சென்னை டெஸ்ட் போட்டியில் அவரது ஆக்‌ஷன் சைட் ஆனாக இல்லாமல் நெஞ்சை பேட்டருக்கு நேராக காட்டி வீசுவதாக அமைந்த்து. அதே போல் அவரது வலது கரம் இலக்கை நோக்கி இல்லாமல் வலது புறம் சாய்ந்து இலக்கிலிருந்து விலகியதாக இருந்தது. பவுல் செய்யும் கை தலைக்கு நெருக்கமாக இருக்க மற்றொரு கை பேட்டருக்கு நேராக இருக்க வேண்டும்.

பவுலிங் போடாத கை வளையாமல் கொள்ளாமல், சாயாமல் கொள்ளாமல் நேராக இருந்து விட்டால் பவுலிங் வீசும் கை தானாகவே நம் தலைக்கு நெருக்கமாக அமையும். இந்த அட்ஜஸ்ட்மெண்ட்டை குல்தீப் யாதவ் மேற்கொண்டு அதைத் தீவிரமாக பயிற்சி செய்தார். மேலும் கையை சுழற்றுவதில் முன்பு மெதுவாக சுழற்றினார் இப்போது கொஞ்சம் வேகமாக சுழற்றுகிறார். ரன் அப் சிக்கலற்றதாக, சீராக இருப்பதையும் உறுதி செய்துள்ளார். பந்து வீசி முடிந்தவுடனான ஃபாலோ த்ரூவில் அவர் உடல் பேட்டரை நோக்கி இருக்கிறது. அவர் வீசும் திசையும் நன்றாக உள்ளது, முன்பை விட இப்போது பந்து அதிகமாக ஸ்பின் ஆகிறது.

குல்தீப் யாதவ்வின் இத்தகைய மாற்றத்திற்கான உழைப்பை மேற்கொண்டதற்காக அவருக்குரிய பெருமையை அளிப்பதுதான் முறை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குல்தீப் யாதவ்வை டெஸ்ட் போட்டிகளில் வைத்துக் கொள்ள வேண்டும், பிட்ச், மைதானம், ஊர் இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது, குல்தீப் எப்படி வீசுகிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும். சமீபத்தில் அவர் ஆடிய டெஸ்ட், ஒருநாள், போட்டிகளில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் விதங்களைப் பார்க்க வேண்டும், அவரிடம் ஆட்டமிழந்தவர்கள் 30 யார்டு சர்க்கிளுக்குள் கேட்ச் ஆகி அவுட் ஆகின்றனர், அல்லது பவுல்டு, எல்.பி.என்று வீழ்த்துகிறார். இது பெரிய விஷயம்.

யஜுவேந்திர செஹல் மாறாக அணி நிர்வாகத்திடம் நேரம் கேட்டு உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட வேண்டும், அதுதான் அவருடைய பந்து வீச்சை சரி செய்ய முடியும். கையை மெதுவாகச் சுழற்றுகிறார் இதனால் பந்தில் ஸ்பின் இல்லாமல் போய் விடுகிறது. இதனால் பேட்டர்கள் அவர் பந்துகளை எளிதில் அடித்து விட முடிகிறது. இப்போதெல்லாம் உடல் செயற்பாடில்லாமல் வெறுமனே கையால் பந்தை ரிலீஸ் மட்டுமே செய்கிறார். இதனால் பிளாட்டாக விழுகிறது. செஹல் நிறைய ஒர்க் அவுட் செய்ய வேண்டியுள்ளது. ஃபாலோ த்ரூ, பந்தின் தையலை பயன்படுத்துவது, பந்தின் வேகம் என்று அவர் ஒர்க் அவுட் செய்ய வேண்டும். ஆனால் குல்தீப் அந்த விதத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்.

ஆகவே உலகக்கோப்பை போட்டிகளில் குல்தீப் யாதவ்வுக்குத்தான் இடமளிக்க வேண்டும். செஹல் இடத்திற்கு வேண்டுமானால் ரவி பிஷ்னாயை தேர்வு செய்வேன், நான் சொல்லும் கூறுகள் அவரது பவுலிங்கில் உள்ளன. மேலும் செஹலை விட பிஷ்னாய் நல்ல பீல்டர்.

இவ்வாறு கூறினார் சுனில் ஜோஷி. உண்மையில் அணித்தேர்வுக்குழுவினர் சிந்திக்க வேண்டிய விஷயங்களை கூறியிருக்கிறார் சுனில் ஜோஷி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x