Published : 31 Jan 2023 05:46 AM
Last Updated : 31 Jan 2023 05:46 AM
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வலது கை பேட்ஸ்மேனான முரளி விஜய், இந்திய அணிக்காக 61 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 17 ஒருநாள் கிரிக்கெட்போட்டி, ஒன்பது டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாகஅவர், கடந்த 2018-ம் ஆண்டுபெர்த் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்றிருந்தார்.
2008-09-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் அறிமுக வீரராக களமிறங்கி இருந்தார். 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழ்நாடு அணிக்காக முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் விளையாடினார். தொழில்முறை கிரிக்கெட்டை பொறுத்தவரை, முரளி விஜய், கடைசியாக 2020-ம் ஆண்டு ஐபிஎல் டி 20 கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
முரளி விஜய் 61 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 38.28சராசரியுடன் 3,982 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் 12 சதங்களும், 15 அரை சதங்களும் அடங்கும். அதேவேளையில் 17 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 339 ரன்களும், சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் 9 ஆட்டங்களில் 169 ரன்களும் சேர்த்தார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார். 2010-ம் ஆண்டு சீசனில் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு சதம், 2 அரை சதங்களுடன் 458 ரன்கள் வேட்டையாடினார். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளாசிய 127 ரன்களும் அடங்கும்.
ஓய்வு குறித்து 38 வயதான முரளி விஜய் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “அனைத்து வகையிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். எனக்கு வாய்ப்பு வழங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்,தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் செம்பிளாஸ்ட் சன்மார் கிளப் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கிரிக்கெட் உலகிலும் அதன் வணிகப் பக்கத்திலும் நான் புதிய வாய்ப்புகளை ஆராய்வேன். அங்கு நான் விரும்பும் விளையாட்டில் தொடர்ந்து பங்கேற்பேன், புதிய மற்றும் மாறுபட்ட சூழல்களில் எனக்கு நானே சவால் விடுத்துக்கொள்வேன். ஒரு கிரிக்கெட் வீரராக எனது பயணத்தின் அடுத்த படி இது என்று நான் நம்புகிறேன். மேலும் எனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எதிர்பார்க்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT