Published : 29 Jan 2023 08:51 PM
Last Updated : 29 Jan 2023 08:51 PM
பாட்செஃப்ஸ்ட்ரூம்: நடப்பு அண்டர்-19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வாகை சூடியுள்ளது இந்தியா.
அண்டர்-19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் எடிஷன் இது. இந்தத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. கடந்த 14-ம் தேதி இந்தத் தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் மற்றும் நாக்-அவுட் என இந்த தொடர் நடைபெற்றது.
இந்திய அணி எப்படி? - குரூப்-டி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று அந்த பிரிவில் முதலிடம் பெற்றது.
தொடர்ந்து சூப்பர் 6 குரூப்-1 பிரிவில் 4 போட்டிகளில் விளையாடி அதில் மூன்றில் வெற்றி பெற்றது. அதோடு சூப்பர் 6 பிரிவிலும் முதலிடம் பிடித்தது. அதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நியூஸிலாந்து அணி உடனான அரையிறுதியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதன் மூலம் முதல் அணியாக இறுதிக்குள் நுழைந்தது.
இறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் அர்ச்சனா தேவி, பர்ஷ்வி சோப்ரா மற்றும் சாது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சோனம் யாதவ், ஷபாலி வர்மா மற்றும் மன்னத் காஷ்யப் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சவுமியா திவாரி, இங்கிலாந்து வீராங்கனையை ரன் அவுட் செய்திருந்தார்.
69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு எட்டியிருந்தது இந்தியா. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 4 ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாது, பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT