Published : 29 Jan 2023 06:38 AM
Last Updated : 29 Jan 2023 06:38 AM
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெல்லாரசின் சபலெங்கா சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் தொடரில் அவர், பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 13-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 5-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் சபலெங்கா, 22-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை சபலெங்கா 4-6 என இழந்தார். எனினும்அடுத்த இரு செட்களையும் துடிப்புடன் விளையாடி 6-3, 6-4 என கைப்பற்றினார்.
முடிவில் 2 மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் சபலெங்கா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் தொடரில் சபலெங்கா சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். மேலும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் 2-வது பெல்லாரஸ் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் சபலெங்கா.
இதற்கு முன்னர் அந்நாட்டைச் சேர்ந்த விக்டோரியா அசரங்கா 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தார்.
ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம்வென்றுள்ள சபலெங்கா, சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை பெற உள்ளார். அதேவேளையில் ரைபகினா முதல் 10 இடங்களுக்குள் முன்னேற்றம் காண்பார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகலில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், 4-ம் நிலைவீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகின்றனர். ஆஸ்திரேலிய ஓபனில் முதன் முறையாக இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ள சிட்சிபாஸ் இதுவரை, கிராண்ட் ஸ்லாம் தொடரில் பட்டம் வென்றது இல்லை.
அதேவேளையில் ஜோகோவிச் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் மட்டும் அவர், 9 முறை வாகை சூடியுள்ளார். கடந்த2021-ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் சிட்சிபாஸ், ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்திருந்தார். இதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க அவர்,முயற்சிக்கக்கூடும். 33-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் களமிறங்கும் ஜோகோவிச் இன்றைய ஆட்டத்தில் பட்டம் வெல்லும் பட்சத்தில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஸ்பெயினின் ரபேல் நடாலின் (22 பட்டங்கள்) சாதனையை சமன் செய்வார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT