Published : 27 Jan 2023 05:22 AM
Last Updated : 27 Jan 2023 05:22 AM
ராஞ்சி: இந்தியா – நியூஸிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் இன்று இரவு7.30 மணிக்கு ராஞ்சியில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி 9-ல் தொடங்க உள்ள பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு நியூஸிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், மொகமது சிராஜ், மொகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் வழக்கமான வீரர்களுடன், 2-ம் நிலை வீரர்களையும் உள்ளடக்கிய இந்திய அணி களமிறங்குகிறது.
இந்த வகையில் ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோருடன் தொடக்க வீரர் பிரித்வி ஷா, ராகுல் திரிபாதி, உம்ரன் மாலிக், ஷிவம் மாவி, ஜிதேஷ் சர்மா, முகேஷ் குமார் ஆகியோரும் அணியில் உள்ளனர்.
இவர்களில் மும்பையை சேர்ந்த பிரித்வி ஷா, ரஞ்சி கோப்பையில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தியதன் மூலம் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். சமீபத்தில் அவர், அசாம் அணிக்கு எதிராக 379 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தார். 23 வயதான பிரித்வி ஷா கடைசியாக இந்திய அணிக்காக 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் களமிறங்கி இருந்தார். அதன் பின்னர் மோசமான பார்ம் காரணமாக தனது இடத்தை இழந்திருந்தார்.
மீண்டும் அணிக்கு திரும்பி உள்ள போதிலும் இன்றைய ஆட்டத்தில் பிரித்வி ஷாவுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் ஷுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வரிசையில் விளையாடி வருகின்றனர். அதிலும் ஷுப்மன் கில் கடந்த 4 இன்னிங்ஸ்களில் இரட்டை சதமும், 2 சதங்களும் விளாசியிருந்தார்.
சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, ராகுல்திரிபாதி என சீனியர் பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையிலும்அணியின் பேட்டிங் வலுவானதாகவே காணப்படுகிறது. பந்துவீச்சுதான் சற்று கவலை அளிக்கக்கூடும். வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், உம்ரன் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார் ஆகியோர் அணியில் உள்ளனர்.
இவர்களில் அர்ஷ்தீப் சிங், உம்ரன் மாலிக், ஷிவம் மாவி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். அர்ஷ்தீப் சிங் இலங்கை அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற டி 20 ஆட்டத்தில் இரு ஓவர்களில் 37 ரன்களை தாரை வார்த்திருந்தார். அதிலும் ஹாட்ரிக்நோபால்கள் வீசி மோசமானசாதனையையும் நிகழ்த்தியிருந்தார். தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அவர்,சிறந்த திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.
அதேவேளையில் ஷிவம் மாவி, தனது அறிமுக ஆட்டத்தில் 22 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி கவனத்தை ஈர்த்திருந்தார். சீரான வேகத்தில் வீசக்கூடிய அவர், உம்ரன் மாலிக்குடன் இணைந்து நியூஸிலாந்து பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் குல்தீப் யாதவுடன் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கக்கூடும்.
நியூஸிலாந்து அணியானது மிட்செல் சாண்ட்னர் தலைமையில் களமிறங்குகிறது. ஒருநாள் போட்டித் தொடரை இழந்துள்ள அந்த அணி டி 20 தொடரில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதில் தீவிரம் காட்டக்கூடும். இந்தூர் போட்டியில் 100 பந்துகளில் 138 ரன்கள் விளாசிய டேவன் கான்வே, ஹைதராபாத் போட்டியில் 78 பந்துகளில் 140 ரன்கள் வேட்டையாடிய மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோருடன் ஃபின்ஆலன், கிளென் பிலிப்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடும்.
நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment