Published : 27 Jan 2023 05:52 AM
Last Updated : 27 Jan 2023 05:52 AM
சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் இடையிலான ஆட்டத்தில் ஒரே நாளில் 18 விக்கெட்கள் சரிந்தன.
தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 324 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய சவுராஷ்டிரா 2-வது நாள் ஆட்டத்தில் 35 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. ஷிராக் ஜானி 14, சேத்தன் சக்காரியா 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய சவுராஷ்டிரா அணி 79.4 ஓவர்களில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
ஷிராக் ஜானி 49, சேத்தன் சக்காரியா 9, கேப்டன் ரவீந்திர ஜடேஜா 15, அர்பித் வசவதா 21, சமர்த் வியாஸ் 5, பிரேரக் மன்கட்1, யுவராஜ்சிங் தோடியா 0 ரன்களில் வெளியேறினர். தர்மேந்திரசிங் ஜடேஜா 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழ்நாடு அணி சார்பில் அஜித் ராம், மணிமாறன் சித்தார்த் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி ரவீந்திர ஜடேஜா, தர்மேந்திரசிங் ஜடேஜா ஆகியோரது சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 36.1 ஓவரில் 133 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37, பாபா இந்திரஜித் 28, மணிமாறன் சித்தார்த் 17, விஜய் சங்கர் 10 ரன்கள் சேர்த்தனர். நாராயண் ஜெகதீசன் 0, ஷாருக் கான் 2, பாபா அபராஜித் 4, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 8, அஜித் ராம் 7, சந்தீப் வாரியர் 4 ரன்களில் நடையை கட்டினர்.
சவுராஷ்டிரா அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்களையும், தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். 266 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சவுராஷ்டிரா அணி3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்தது. ஜெய் கோஹில் ரன் ஏதும் எடுக்காமல் மணிமாறன் சித்தார்த் பந்தில் போல்டானார். ஹர்விக் தேசாய் 3, சேத்தன் சக்காரியா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கைவசம் 9 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 262 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை சந்திக்கிறது சவுராஷ்டிரா அணி. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 18 விக்கெட்கள் சரிந்தன. இதனால் கடைசி நாள் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT