Published : 26 Jan 2023 06:31 AM
Last Updated : 26 Jan 2023 06:31 AM
மெல்பர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா-ரோகன் போபண்ணா ஜோடி முன்னேறியுள்ளது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் அரை இறுதிச் சுற்றில் சானியா-போபண்ணா ஜோடியுடன், பிரிட்டனின் நீல் ஸ்கப்ஸ்கி, அமெரிக்காவின் தேசிரே கிராவ்சிக் ஜோடி மோதியது.
இதில் சானியா ஜோடி 7-6 (5), 6-7 (5), 10-6 என்ற செட் கணக்கில் நீல்-தேசிரே ஜோடியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் வரை இந்த ஆட்டம் நீடித்தது.
இதுவரை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 6 பட்டங்களை சானியா கைப்பற்றியுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் 3 பட்டங்களையும், கலப்பு இரட்டையர் பிரிவில் 3 பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். இந்த கலப்பு இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்றால் அவரது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துவிடும். அதேநேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, ஒரே ஒரு பட்டத்தை மட்டும் வென்றுள்ளார்.
அரை இறுதியில் டாமி: ஆடவர் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் டாமி பால் 7-6 (6), 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான பென் ஷெல்டனை வீழ்த்தினார்.
மகளிர் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை மாக்டா லினெட், செக் குடியரசின் முன்னணி வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவுடன் மோதினார். இதில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் பிளிஸ்கோவாவை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தார் மாக்டா லினெட். கரோலினா பிளிஸ்கோவா 7-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் கால் இறுதியில் தோல்வி கண்டுள்ளார். மாக்டா லினெட், அரை இறுதியில் சபலென்காவை எதிர்த்து விளையாடவுள்ளார்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலெங்கா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் குரோஷியாவின் டோன்னா வெகிக்கைச் சாய்த்து அரை இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 49 நிமிட நேரம் தேவைப்பட்டது. 24 வயதான சபலென்கா முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபனில் அவர் 4-வது சுற்று வரை தகுதி பெற்று இருந்தார். ஒட்டு மொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 4-வது முறையாக அரை இறுதியில் அவர் விளையாடுகிறார். விம்பிள்டனில் 2021-ம் ஆண்டும், அமெரிக்க ஓபனில் 2021, 2022-ம்ஆண்டுகளிலும் அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்று இருந்தார்.
அரை இறுதியில் ஜோகோவிச்: ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டிக்கு செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற கால் இறுதியில் ஜோகோவிச்சுடன், ரஷ்ய வீரர் ஆந்த்ரே ரூபலெவ் மோதினார். இந்த ஆட்டத்தில் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் ஜோகோவிச்சுடன், அமெரிக்காவின் டாமி பால் மோதவுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT