Published : 30 Dec 2016 03:33 PM
Last Updated : 30 Dec 2016 03:33 PM

141 ஓவர்களை மழையால் இழந்த மெல்போர்ன் டெஸ்ட்டில் பாக். இன்னிங்ஸ் தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அதிர்ச்சி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று வென்றுள்ளது. இத்தனைக்கும் பிட்ச் கான்க்ரீட் தரை போல் இருந்ததே தவிர விக்கெட்டுகள் இப்படி சரியும் அளவுக்கு அதில் ஒன்றுமில்லை.

பிரிஸ்பனில் சாத்தியமற்ற வெற்றி இலக்கை விரட்டி நெருக்கமான தோல்வி, மெல்போர்னில் 68 ஓவர்கள் ஆடியிருந்தால் டிரா செய்திருக்கலாம் ஆனால் இங்கு இன்னிங்ஸ் தோல்வி. இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மாறாத ‘கணிக்கவியலாத் தன்மை’. அதாவது எங்கிருந்து வேண்டுமானாலும் வெற்றிபெறும் அதே போல் தோல்வி சாத்தியமில்லாத நிலையிலிருந்தும் தோல்வி அடையும், இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சாராம்சம்!

5-ம் நாளான இன்று 465/6 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா 142 ஓவர்களில் ஓவருக்கு 4.39 என்ற ரன்விகிதத்தில் 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 624 ரன்கள் குவித்தது, கேப்டன் ஸ்மித் 13 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 165 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, மிட்செல் ஸ்டார்க் 91 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 84 ரன்களை விளாசித்தள்ளினார். இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 154 அதிரடி ரன்களைச் சேர்த்தனர்.

இதனையடுத்து 2-வது இன்னிங்ஸை ஆட களமிறங்கிய பாகிஸ்தான் 53.2 ஓவர்களில் 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்களில் தோல்வி தழுவி தொடரை இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மீண்டும் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் நேதன் லயன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.

அசார் அலி இரட்டைச் சதத்துடன் முதல் இன்னிங்ஸில் 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த பாகிஸ்தான் அணி சுமார் 141 ஓவர்கள் மழையால் விரயமான டெஸ்ட் போட்டியில் தோல்வி தழுவியது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தலையில் அடிபட்டாலும் 2-வது இன்னிங்சிலும் அசார் அலி 112 பந்துகளைச் சந்தித்து 43 ரன்களை எடுத்து ஹேசில்வுட் பந்தில் எல்.பி. ஆனார். இவருக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ஸ்கோரை எடுத்தவர் சர்பராஸ் அகமது இவரும் 43 ரன்கள். கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஸ்கோரரை தொந்தரவு செய்யவில்லை, யூனிஸ் கான் 24 ரன்களுக்கு நேதன் லயனிடம் ஆட்டமிழந்தார்.

நேதன் லயன் இன்னிங்ஸின் 20-வது ஓவரில் யூனிஸ் கான், மிஸ்பாவை வீழ்த்த பிறகு முக்கிய விக்கெட்டான ஆசாத் ஷபிக்கையும் வீழ்த்த அசார் அலி 6-வது விக்கெட்டாக ஆட்டமிழக்க பாகிஸ்தான் 101/6 என்று ஆனது. யூனிஸ்கான், ஆசாத் ஷபிக் இருவரும் ஹேண்ட்ஸ்கோம்பிடம் கேட்ச் கொடுத்து லயனிடம் வீழ்ந்தனர். மிஸ்பா உல் ஹக் அதிர்ச்சி ஸ்வீப் ஷாட்டில் மேடிசனிடம் கேட்ச் கொடுத்து லயனிடம் அவுட் ஆனார்.

தொடக்கம் முதலே பாகிஸ்தான் பந்து வீச்சும், பீல்டிங்கும் தோல்வி பயத்தில் இருந்ததை வெளிப்படுத்துவதாக இருந்தது, ஆனால் தோல்வி பயத்தை ஏற்படுத்தியது ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் பேட்டிங். லாங் ஆஃபில் ஸ்டார்க்கிற்கு சொஹைல் கான் கேட்சை விட்டார். மிஸ்பா தடுப்பு உத்தியில் வீரர்களை தள்ளி நிறுத்தினாலும் ஸ்டார்க், ஸ்மித் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று பாக். வீசிய 28 ஓவர்களில் 159 ரன்கள் விளாசப்பட்டது. யாசிர் ஷா சிமெண்ட் பிட்சில் சரியாகச் சிக்கினார், இவர் 41 ஓவர்களில் 207 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஸ்மித் 624/8-ல் டிக்ளேர் செய்ய பாகிஸ்தான் களமிறங்கியது.

சமி அஸ்லம், ஹேசில்வுட் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். பாபர் ஆஸம், ஸ்டார்க் இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆனார். அதன் பிறகுதான் லயன் ஓவரில் யூனிஸ் கான், மிஸ்பா இருவரும் ஆட்டமிழந்தனர். பின்கள வீரர்களை ஒர்க் அவுட் செய்து மிட்செல் ஸ்டார்க் வீழ்த்தினார். சர்பராஸ் அகமதுவுக்கு 4 பந்துகளை வெளியில் வீசி ஒரு யார்க்கரையும் வீசி குழப்பி கடைசியில் ஒரு அதிவேக இன்ஸ்விங்கரை வீச பவுல்டு ஆனார். மொகமது ஆமிரும் ஜேக்சன் பேர்டின் இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார். வஹாப் ரியாஸும் ஸ்டார்க் இன்ஸ்விங்கருக்கு பவுல்டு ஆக, கடைசியாக யாசிர் ஷா, ஸ்டார்க்கின் வேகமாக வந்த பந்தை திருப்பி விட நினைத்து கொடியேற்ற பேர்ட் கேட்ச் பிடித்தார். பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி கண்டது. தொடரை வென்ற ஆஸ்திரேலியா மைதானத்தில் கொண்டாடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x