Published : 25 Jan 2023 06:50 AM
Last Updated : 25 Jan 2023 06:50 AM
இந்தூர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.
இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோரது அதிரடி சதத்தால் 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 385 ரன்கள்குவித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 26.1 ஓவர்களில் 212 ரன்கள் விளாசி மிரளச் செய்தது. தனது 30-வது சதத்தை விளாசிய ரோஹித் சர்மா 85 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்த நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் பந்தில் போல்டானார்.
அதேவேளையில் தனது 4-வது சதத்தை 72 பந்துகளில் கடந்த ஷுப்மன் கில் 78 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் விளாசிய நிலையில் பிளேர் டிக்னர் பந்தில் ஆட்டமிழந்தார். லாக்கி பெர்குசன் வீசிய 8-வது ஓவரில் ஷுப்மன் கில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 22 ரன்களை வேட்டையாடினார். ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் ரன் குவிப்பு வேகத்தில் தொய்வு ஏற்பட்டது.
400 ரன்களுக்கு மேல் இந்திய அணி குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடுவரிசை பேட்டிங் சரிவை கடும் சரிவை சந்தித்தது. இஷான் கிஷன் 17 ரன்களில் ரன் அவுட் ஆனார். விராட் கோலி 27 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக்கப் டஃபி பந்தில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 14 ரன்னில் நடையை கட்டினார். இறுதிக் கட்டத்தில் மட்டையை சுழற்றிய ஹர்திக் பாண்டியா 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 9, ஷர்துல் தாக்குர் 25 ரன்களில் வெளியேறினர். கடைசி பந்தில் குல்தீப் யாதவ் (3) ரன் அவுட் ஆனார்.
நியூஸிலாந்து அணி சார்பில் ஜேக்கப் டஃபி, பிளேர் டிக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதில் ஜேக்கப் டஃபி 10 ஓவர்களில் 100 ரன்களை தாரை வார்த்திருந்தார். பிளேர் டிக்னர் 76 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
386 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 41.2 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டேவன் கான்வே 138 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 42 ரன்களும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
யுவேந்திர சாஹல் 43 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா, உம்ரன் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.
90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது.
ஷர்துல் தாக்குர் ஆட்டநாயகன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை ஷுப்மன் கில் தட்டிச் சென்றார்.
பாண்டிங்கின் 30 சதங்கள் சாதனையை சமன் செய்தார் ரோஹித் சர்மா: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கின் 30 சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார் இந்தியாவின் ரோஹித் சர்மா.
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா 83 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். கடைசியாக அவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற போட்டியில் சதம் விளாசியிருந்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவின் 30-வது சதமாகவும் இது அமைந்தது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் 30 சதங்களுடன் உள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார் 35 வயதான ரோஹித் சர்மா.
இந்த மைல் கல்லை ரோஹித் சர்மா 241-வது ஆட்டத்தில் எட்டியுள்ளார். ரிக்கி பாண்டிங் 30 சதங்களை 375 ஆட்டங்களில் அடித்திருந்தார். இந்த வகை சாதனையில் சச்சின் டெண்டுல்கர் (49 சதங்கள்), விராட் கோலி (46) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
2-வது விரைவு சதம்..: இந்தூர் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக ரோஹித் சர்மா 83 பந்துகளில் சதம் விளாசினார். இது அவர், அடித்த 2-வது விரைவு சதமாகும். இதற்கு முன்னர் 2018-ம் நாட்டிங்காமில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 82 பந்துகளில் சதம் விளாசியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT