Published : 23 Jan 2023 09:48 PM
Last Updated : 23 Jan 2023 09:48 PM
இந்தூர்: காயம் குறித்த அச்சுறுத்தல் ஏதும் இல்லாத வரையில் இந்திய அணியின் பிரதான வீரர்கள் ஐபிஎல் சீசனில் விளையாடலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்த தொடருக்கு தயாராகும் வகையில் சுமார் 20 வீரர்கள் அடங்கிய உத்தேச பட்டியலை பிசிசிஐ தயார் செய்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடும் பிரதான இந்திய வீரர்களின் பணிச்சுமையை பிசிசிஐ கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அதனால் ஃபிரான்சைஸ்களுடன் தேசிய கிரிக்கெட் அகாடமியும் இணைந்து இந்த வீரர்களை கண்காணிக்க உள்ளதாம்.
இதன் மூலம் ஐபிஎல் சீசனின் போது வீரர்களின் உடற்திறன், மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை போன்றவை கண்காணிக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல திட்டங்கள் இருக்கும் என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சொல்லப்பட்டது.
“இன்றைய கிரிக்கெட்டில் ஒரு பகுதியாக பணிச்சுமையை பார்க்க வேண்டியுள்ளது. இதை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்து கொண்டே இருப்போம். டி20 தொடரில் ராகுல், ரோகித் மற்றும் கோலி போன்ற வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது இதன் காரணமாகதான்.
காயம் மற்றும் பணிச்சுமை என்பது வேறு வேறானது. அந்த இரண்டையும் நாம் எப்படி பேலன்ஸ் செய்கிறோம் என்பது முக்கியம். பெரிய தொடர்களுக்கு பிரதான வீரர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஃபிரான்சைஸ்களுடன் தேசிய கிரிக்கெட் அகாடமியும், மருத்துவக் குழுவினரும் தொடர்பில் இருப்பார்கள். காயம் குறித்த அச்சுறுத்தல் இல்லாத வரை பிரதான வீரர்கள் ஐபிஎல் விளையாடலாம். காயமோ அல்லது அது குறித்த அச்சுறுத்தலோ பிரதான வீரர்களுக்கு இருந்தால் பிசிசிஐ நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது” என திராவிட் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT