Published : 11 Dec 2016 05:35 PM
Last Updated : 11 Dec 2016 05:35 PM

கோலி, ஜெயந்த் யாதவ் அபார ஆட்டத்திற்குப் பிறகு வெற்றிப் பாதையில் இந்திய அணி

மும்பை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 231 ரன்கள் கூடுதலாக எடுத்த இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணியின் 6 விக்கெட்டுகளைச் சாய்த்து வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், ஜெயந்த் யாதவ், புவனேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்ற இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்துள்ளது. இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இன்னும் 49 ரன்கள் தேவைபடுகிறது. ஆட்ட முடிவில் ஜானி பேர்ஸ்டோ 50 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். கடைசி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பால் 2 ரன்களில் அஸ்வினிடம் வெளியேற, பேர்ஸ்டோ மட்டும் களத்தில் நிற்கிறார்.

விராட் கோலி, ஜெயந்த் யாதவ் அசுரக் கூட்டணி

இன்று காலை 451/7 என்று தொடங்கிய இந்திய அணி விராட் கோலியின் அபாரமான இரட்டைச் சதம் மற்றும் ஜெயந்த் யாதவ்வின் சாதனை 9-ம் நிலை சதத்தின் மூலம் 631 ரன்கள் எடுத்தது.

8-வது விக்கெட்டுக்காக 241 ரன்கள் சேர்த்த கோலி-யாதவ் ஜோடி, அசாருதீன் - கும்ப்ளே ஆகியோரின் 161 ரன்கள் 8-வது விக்கெட் சாதனை கூட்டணி ரன்களை உடைத்தனர்.

விராட் கோலி 340 பந்துகளில் 25 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 235 ரன்கள் எடுத்து விரைவு ரன் குவிப்பு அவசரத்தில் வோக்ஸ் பந்தில் ஆண்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜெயந்த் யாதவ் ஸ்டம்ப்டு ஆனார். ஆனால் அதற்கு முன்னர் சாதனை 104 ரன்களை எடுத்தார். விராட் கோலி 8 மணிநேரங்கள் அயராத கவனக்குவிப்புடன் ஆடியது அசத்தல்தான்.

ஒரே ஆண்டில் 3 இரட்டைச்சதங்கள் எடுத்த டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் வரிசையில் கோலி இணைந்தார்.

இந்தியா 631 ரன்கள் எடுத்தது, அலிஸ்டர் குக்கின் கேப்டன்சி நிச்சயம் கடும் விமர்சனத்துக்குள்ளாகும். நேற்று புதிய பந்தை எடுக்காமல் 49 ஓவர்கள் காலம் தாழ்த்தியது, ஜெயந்த் யாதவுக்கு ஆரம்பத்தில் கேட்ச் விட்டது, இன்று நெருக்கமாக பீல்ட் அமைக்கமால் எதிர்மறை உத்திகளைக் கடைபிடித்தது, ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கோலியும், யாதவ்வும் ஆதிக்கம் செலுத்தியதை வேடிக்கை பார்த்தது, பேட்டிங்கில் மீண்டும் மீண்டும் ஜடேஜாவிடம் அதே பந்தில் ஆட்டமிழப்பது என்று குக்கிற்கு எதிராக ஏகபப்ட்ட விஷயங்கள் கிளம்பும் என்று எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்து தங்கள் இன்னிங்சை தொடங்கிய போது முதல் இன்னிங்ஸ் சதநாயகன் கீட்டன் ஜெனிங்ஸ், புவனேஷ் குமார் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து வீசிய இன்ஸ்விங்கரை கால்காப்பில் நேராக வாங்கி வெளியேறினார்.

ஜோ ரூட், ஆதிக்கபூர்வ இன்னிங்ஸை ஆடினார், ஸ்பின்னர்களை சக்தி வாய்ந்த ஸ்வீப்கள், மேலேறி வந்து கவர் எக்ஸ்ட்ரா கவரில் ஆடுவது ரிவர்ஸ் ஸ்வீப் என்று 112 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 77 அதிரடி ரன்களை எடுத்து நம்பிக்கை அளித்ததோடு, கோலியின் தாக்குதல் களவியூகத்தை முறியடித்தார். முறியடித்த பிறகு ஒரு பந்து ஷார்ட் லெக் திசையில் கேட்ச் போன்று சென்றது. கவலையில்லாமல் ஆடினார், இதுதான் அணுகுமுறை! ஆனால் இன்றைய அருமையான வீரர் ஜெயந்த் யாதவ் ரூட்டை ஒரு பந்தை வேகமாக வீசி எல்.பி.யில் வீழ்த்தினார்.

முன்னதாக அலிஸ்டர் குக் 18 ரன்களில் ஜடேஜாவின் வேகமான ஸ்லைடருக்கு எல்.பி.ஆகி வெளியேறினார். மொயின் அலியும் ஜடேஜாவின் வேகமான, அவசரப்படுத்திய பந்தை லெக் திசையில் அருகே கேட்ச் கொடுத்து 0-வில் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் 2 பவுண்டரி 1 சிக்சர் என ஆக்ரோஷம் காண்பித்து 18 ரன்களில் அஸ்வின் பந்து ஒன்றை ஸ்வீப் ஆட முயல பந்து மட்டையில் பட்டு பூட்ஸில் பட்டு விஜய்யிடம் அருகே கேட்ச் ஆனது. சற்றே துரதிர்ஷ்டமான ஆட்டமிழப்புதான். கடைசியில் பால் அஸ்வின் பந்தில் படேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேற இங்கிலாந்து 182/6 என்ற நிலையில் 4-ம் நாள் ஆட்டம் நிறைவுற்றது.

அஸ்வின் மிக அருமையாக, ஏறக்குறைய கணிக்க முடியாத பவுலராகவே ஆகிவிட்டார் போல் தெரிகிறது, ஒரே ஆக்சனில் ஒரு பந்து பயங்கரமாக ஆஃப் ஸ்பின்னும் ஒரு பந்து எதிர்த்திசையில் பயங்கரமாக லெக் பிரேக்கும் ஆனதால் எதை ஆடுவது எதை விடுவது என்ற குழப்பம் மேலிட்டுள்ளது.

ஆனாலும் வழக்கம் போல் ஜானி பேர்ஸ்டோ எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடி 50 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். இந்திய அணி வெற்றிப்பாதையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x