Published : 03 Dec 2016 05:27 PM
Last Updated : 03 Dec 2016 05:27 PM
மேத்யூ வேட் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக விமர்சனம் செய்த அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெலுக்கு ஆஸ்திரேலிய லீடர்ஷிப் குழு அபராதம் விதித்துள்ளது.
அபராதம் என்பதற்கும் மேலாக கிளென் மேக்ஸ்வெலின் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளதாகவே ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விக்டோரிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் யார் எந்த நிலையில் களமிறங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார், நான் அவருக்குப் பின்னால் களமிறங்குவது வேதனை அளிக்கிறது, இது எனது டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பை பறித்துள்ளது என்று ஊடகங்களில் கிளென் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்ததையடுத்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகமும், மேத்யூ வேடும் கடும் கோபமடைந்துள்ளனர்.
கேப்டன் ஸ்மித், மேக்ஸ்வெல் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். லீடர்ஷிப் குழுவில் ஸ்மித், துணைத்தலைவர் டேவிட் வார்னர், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்டோர் உள்ளனர். மேக்ஸ்வெலின் கருத்து ‘மரியாதைக்குறைவானது’ என்று முடிவெடுக்கப்பட்டு அவருக்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கிளென் மேக்ஸ்வெலின் ‘வெளிப்படையான’, ‘மனம் திறந்த’ கருத்திற்கு மற்ற வீரர்களிடமிருந்து ஆதரவும் கிளம்பியுள்ளது.
மேக்ஸ்வெலுக்கு ஆதரவாக மிட்செல் ஜான்சன் தனது ட்விட்டரில், “அபராதம்?! விக்கெட் கீப்பருக்கு முன்பாகத்தான் மேக்ஸ்வெல் பேட் செய்ய வேண்டும். அவர் ஒரு பேட்ஸ்மென், அவர் நேர்மையாக இருந்திருக்கிறார். சரியா?” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சமூகவலைத்தளங்களில் மேக்ஸ்வெலுக்கு பேராதரவு கிட்டியுள்ளது. அதாவது வெளிப்படையாக கருத்தை தெரிவித்ததற்கு அபராதம் விதிப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஆனால் ஸ்மித், “மேக்ஸ்வெல் கருத்தினால் நாங்கள் அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளோம். நான் இதனை அவரிடமே தெரிவித்து விட்டேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முக்கிய மதிப்பீடுகளில் அணியின் சக வீரர்களையும் எதிரணியினரையும் மதிக்க வேண்டும் என்பது முக்கியமானது. மேக்ஸ்வெல் கருத்து மரியாதைக்குறைவானது.
ஆனால் நாளை (ஞாயிறு) நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆட மேக்ஸ்வெல் பெயர் பரிசீலனையில்தான் உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT