Published : 22 Jan 2023 12:18 AM
Last Updated : 22 Jan 2023 12:18 AM
புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தலைவருக்கு எதிராக இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் WFI கூடுதல் செயலாளர் வினோத் தோமரை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
வினோத் தோமர் WFI தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குடன் நெருக்கமாக பணியாற்றிய நபர். WFIன் அன்றாட விவகாரங்களை இவரே கவனித்து வந்தார். வினோத் தோமர் சஸ்பெண்ட் மட்டுமில்லாமல் மேலும் சில நடவடிக்கைகளை மத்திய விளையாட்டுத் துறை எடுத்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கோண்டாவில் நடந்து வரும் தரவரிசைப் போட்டியை ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளது. அதுபோக, WFIன் அனைத்து செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய விளையாட்டுத் துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலக கோரி முன்னணி வீராங்கனைகளான வினேஷ் போகத், சரிதா, சாக் ஷி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்ட பலர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் போராட்டத்தை தொடங்கினர்.
இவர்களுடன் முன்னணி வீரரான பஜ்ரங் புனியாவும் போராடி வந்தார். பின்னர் பஜ்ரங் புனியா, ரவி தஹியா, சாக் ஷி மாலிக், வினேஷ்போகத் ஆகியோர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குரை நேரில் சந்தித்து சுமார் ஏழு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் போராட்டத்தை இன்று காலை வாபஸ் பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT