Published : 21 Jan 2023 07:32 AM
Last Updated : 21 Jan 2023 07:32 AM

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு - விசாரணை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர். அவர், பதவி விலகக்கோரி முன்னணி வீராங்கனைகளான வினேஷ் போகத், சரிதா, சாக் ஷி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்ட பலர் டெல்லிஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் போராட்டத்தை தொடங்கினர். இவர்களுடன் முன்னணி வீரரான பஜ்ரங் புனியாவும் போராடி வருகிறார்.

இந்த போராட்டம் நேற்று 3-வதுநாளாக தொடர்ந்தது. இதற்கிடையே போராட்டம் நடத்தியவர்களில் இருந்து பஜ்ரங் புனியா, ரவி தஹியா, சாக் ஷி மாலிக், வினேஷ்போகத் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குரை நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது, இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உடனடியாக கலைக்கவேண்டும் என வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர். பேச்சுவார்த்தை முடிந்து அதிகாலை 1.45 மணி அளவில்தான் வீராங்கனைகள் வெளியே வந்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய வீராங்கனைகள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர். அதில், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்ய ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கலைக்க வேண்டும். இதன் தலைவர்நீக்கப்பட வேண்டும். மேலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் நிதி முறைகேடு நடந்துள்ளது. தேசிய முகாமில் உள்ள பயிற்சியாளர்கள் திறமையற்றவர்களாக உள்ளனர். இதுதொடர்பாகவும் விசாரிக்க வேண்டும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பை வழிநடத்த புதிய கமிட்டியை மல்யுத்த வீரர்களின் ஆலோசனையுடன் அமைக்க வேண்டும்.

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக நாங்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்துவதற்கு நிறைய தைரியம் தேவைப்பட்டது. அவர் பதவி நீக்கம் செய்யப்படாவிட்டால், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துஇளைஞர்களின் வாழ்க்கையும் முடிந்துவிடும். இந்திய மல்யுத்தகூட்டமைப்பின் தலைவரை பதவிநீக்கம் செய்யும் வரை நாங்கள்போராட்டத்தில் இருந்து விலக மாட்டோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் ரவி தஹியா, பஜ்ரங் புனியா, சாக் ஷி மாலிக், வினேஷ் போகத், தீபக் புனியா ஆகியோர் கையெழுத்திட்டு இருந்தனர்.

இந்த கடிதம் தொடர்பாக விவாதிக்க நேற்று மாலை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு அவசரமாக கூடியது. இதில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கமிட்டியில் மேரிகோம், டோலா பானர்ஜி, அலக்நந்தா அசோக், யோகேஷ்வர் தத், சஹ்தேவ் யாதவ் மற்றும் இரு வழக்கறிஞர்கள் இடம் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவில் மேரிகோம், டோலா பானர்ஜி, அலக்நந்தா அசோக், யோகேஷ்வர் தத், சஹ்தேவ் யாதவ் உள்ளிட்ட 7 பேர் இடம் பெறுவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x