Published : 20 Jan 2023 06:41 AM
Last Updated : 20 Jan 2023 06:41 AM
புதுடெல்லி; இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியும் ஆன பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் அவரை பதவியில் இருந்து நீக்கம் வேண்டும் எனக்கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வினேஷ்போகத், சரிதா, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக் ஷிமாலிக் உள்ளிட்ட 30 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இவர்களது போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.அதில், “72 மணி நேரத்துக்குள்கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று 2-வது நாளாக வீராங்கனைகள் போராடிய நிலையில் காலையில் சில மல்யுத்த வீரர்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சக அலுவலக அதிகாரிகள் அழைத்து பேசினர். இதில் திருப்தி ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
வினேஷ் போகத் கூறும்போது, “எங்கள் போராட்டத்தின் 2-வது நாளில் அரசாங்கத்திடம் இருந்துதிருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. பிரிஜ் பூஷன் சரண் சிங் ராஜினாமா செய்து சிறையில் அடைக்கப்படுவதை உறுதி செய்வோம். அவர் மீது நாங்கள் வழக்கு தொடருவோம்’’ என்றார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு எதிராக நட்சத்திர மல்யுத்தவீராங்கனைகளான சாக் ஷி மாலிக்,வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் குற்றச்சாட்டுகளை கூறியதை அடுத்து டெல்லிமகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், டெல்லி காவல்துறை, மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயற்குழு மற்றும் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வரும் 22-ம் தேதி உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT